மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.64 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.41 கோடி மதிப

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2025
.

செ.வெ.எண்:-53/2025

நாள்:-13.11.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.64 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.41 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(13.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.92.97 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

முன்னதாக காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிகள் என மொத்தம் ரூ.3.64 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.41 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிதோடு மட்டுமின்றி சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டிற்காக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகளவு மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக புதிய கல்லுாரிகளை தொடங்க அனுமதி அளித்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல்லுாரி மாணவிகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு பழனி திருக்கோயில் சார்பில் வழங்கப்படுகிறது.

இந்தக் கல்லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை அடையாறில் உள்ள அண்ணா இன்ஸ்டிடியூட்டுக்கு அடுத்தபடியாக காளாஞ்சிப்பட்டி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொப்பம்பட்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் கேதையுறும்பு ஆகிய பகுதியில் தலா ரூ.10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கே.கீரனூர் ஊராட்சி, கீரனூரில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டடம், இடையன்வலசு கிராமத்தில் ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கட்டடம், வலையப்பட்டி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடை, புளியமரத்துக்கோட்டை ஊராட்சி புளியமரத்துக்கோட்டையில் ரூ.9.97 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைகடை கட்டடம், நாகப்பனூரில் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாடகமேடை, மல்லிகாபுரத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாடகமேடை, நவலூற்று கிராமத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூடை, புளியமரத்துக்கோட்டையில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொது நூலக கட்டடம் ஆகிய ரூ.92.97 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், புளியமரத்துக்கோட்டை ஊராட்சி, புளியமரத்துக்கோட்டையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணி, கோடாங்கிபட்டியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டும் பணி, மல்லிகாபுரத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடை கட்டும் பணி என மொத்தம் ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான பணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, சுகாதாரம், கல்வி, பேருந்து வசதிகள், மின்சார வசதிகள் அனைத்தும் செய்துதரப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு.பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.