மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்—நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
செ.வெ.எண்: 31/2026
நாள்: 12.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, வளையபட்டி மற்றும் வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (12.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, வளையபட்டி மற்றும் வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சிக்கமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இராஜகவுண்டன்புதூர் நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2 கோடியே 22 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் 08.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 1287 நியாய விலைக்கடைகளின் மூலமாக 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,94,141 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்குவதற்கு ரூ.2.63 கோடியும், ரொக்கம் ரூ.3000/- வழங்குவதற்கு ரூ.208.24 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 51 ஆயிரம் பயனாளிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில், 13.12.2025-அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 07.01.2026-அன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1,02,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு கடந்த 06.01.2026 வரை ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 7,323 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, வளையபட்டி மற்றும் வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 09.01.2026-அன்று ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கிடைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றபட்டுள்ளது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக்கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்இ தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் 05.01.2026-அன்று சென்னையில் தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 11 அரசு கல்லூரி மற்றும் ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு 2321 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், பழனி வட்டாட்சியர் திரு.பிரசன்னா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் திருமதி.சுவேதா அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.