மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பரப்பலாறு அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
.

செ.வெ.எண்:-40/2026

நாள்:14.01.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பரப்பலாறு அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை இன்று (14.01.2026) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், வடகாடு கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று(14.01.2026) தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம். வடகாடு கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணையில் பாசனத்திற்காக நீர் திறந்து விட அரசாணை (வாலாயம்) எண்.26 நிர்வளத் (கோ.1) துறை, நாள்.12.01.2026 வரப்பெற்றுள்ளது. மேலும், பரப்பலாறு அணையில் நீர் திறப்பின் மூலம் பெருமாள்குளம், முத்துபூபாலசமுத்திரம் கண்மாய், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரம் கண்மாய் மற்றும் ஜவ்வாதுப்பட்டி பெரியகுளம் ஆகிய ஆறு கண்மாய்களுக்கு 14.01.2026 முதல் 23.01.2026 வரை 51.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறக்கப்பட்டு 1323 ஏக்கர் நிலங்களில் நிலையிலுள்ள பயிர்கள் பாசன வசதி பெறுகிறது. இதன்மூலம், தாசாரிபட்டி, விருப்பாட்சி, தங்கச்சியம்மாபட்டி, ஓடைப்பட்டி, வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.

பரப்பலாறு அணையின் மொத்த நீளம் 81.08 மீட்டர். நீர்வழிந்தோடி நீளம் 29.25 மீட்டர். அணை நீரின் ஆழம் 27.43 மீ/ 90 அடி, நீர் வடி பரப்பு 72.88 ச.கி.மீ, கொள்ளளவு 197.95 மி.க.அடி, நீர் நிரப்பும் எண்ணிக்கை 2.22 முறை, அதிக பட்ச வெள்ள நீர் போக்கு 26200 க.அடி / வினாடிக்கு, பாசன பரப்பு 1323 ஏக்கர். அணையின் பாசன குளம் 6 உள்ளது. 14.01.2026-ந் தேதியின்படி, நீர் இருப்பு உயரம் 83.12/90.00 அடி, நீர் இருப்பு கொள்ளளவு 140.40/197.95 மி.க.அடி, நீர் வரத்து 3 க.அடி/ வினாடி உள்ளது. இவ்வணை ஒட்டன்சத்திரம் நகர் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது.

பரப்பலாறு அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு) திரு.பாலமுருகன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.