மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 11 புதிய பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 23/07/2024
.

செ.வெ.எண்:-55/2024

நாள்:-21.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 11 புதிய பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 11 புதிய பேருந்து இயக்கத்தை இன்று (21.07.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்தினை மேம்படுத்திடவும், பொதுமக்கள் பேருந்து பயணத்தினை அதிகம் பயன்படுத்தவும், சாலை போக்குவரத்தினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான சூழ்நிலையில் பயணம் செய்வதற்காகவும், குக்கிராமங்களுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பதற்காகவும் புதிய பேருந்துக்களை கொள்முதல் செய்து அனைத்து மாவட்டத்திற்கும் வழங்கியுள்ளார்கள்.

தமிழகத்தில் இயங்கிய பழைய பேருந்துக்களை மாற்றி புதிய பேருந்துகளாக இயக்கிடவும், பேருந்து போக்குவரத்து இல்லாத இடங்களுக்கு புதிய பேருந்து சேவையை ஏற்படுத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7666 பேருந்துகளை ரூ.5000 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டத்தின்கீழ் திண்டுக்கல், மதுரை, மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களில் செயல்பட்டு நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவையை இயக்கி வருகின்றது. திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் 15 பணிமணைகளில் உள்ள மொத்த போக்குவரத்துகளின் எண்ணிக்கை 498 மற்றும் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 798 ஆகும். திண்டுக்கல் கோட்டத்தில் உள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3000 ஆகும். இக்கழகம் சாதாரணப் பேருந்து, விரைவுப் பேருந்து மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்கி வருகின்றது.

மேலும், நாளொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட இயக்க தூரம் 3.86 இலட்சம் கிலோ மீட்டர் ஆகும். இதனால், மாதத்திற்கு 152745416 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் இயக்கம் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 1.96 இலட்சம் பயணிகளும், மாதம் ஒன்றுக்கு 60 இலட்சம் பயணிகளும் பயன்படும் வகையில் வழித்தட சேவைகள் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

07.05.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல் கோட்டத்தில் 2 இலட்சம் பயனாளர்களும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 44.65 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. 500 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து செய்து வருகின்றது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் கோட்டத்திற்கு 2022-23, 2023-24 ஆகிய ஆண்டுகளில் 47 கோடி மதிப்பீட்டில் 94 பேருந்துகளும், 2024-25-ஆம் நிதியாண்டில் 75 கோடி மதிப்பீட்டில் 155 கோடி பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3 புதிய நகரப்பேருந்துகளும், 8 புதிய புறநகரப் பேருந்துகளும் என மொத்தம் 11 புதிய பேருந்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் பழனி-கீரனூர், பழனி–கள்ளிமந்தையம் (தேவத்தூர் வழி), ஒட்டன்சத்திரம்–குரும்பப்பட்டி (கேதையுறும்பு, இடையகோட்டை வழி) ஆகிய வழித்தடங்களில் 3 நகரப்பேருந்துகளும், பழனி–திருச்சி வழித்தடங்களில் 3 புறநகரப்பேருந்துக்களும், பழனி-நாகர்கோவில் வழித்தடங்களில் 2 புறநகரப்பேருந்துக்களும், பழனி-நெய்வேலி வழிததடங்களில் 1 புறநகரப்பேருந்தும், பழனி–திருச்செந்தூர் வழித்தடங்களில் 1 புறநகரப்பேருந்தும், மதுரை-கோயம்புத்தூர் வழிதடங்களில் 1 புறநகரப்பேருந்தும் என 11 புதிய பேருந்துக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்கள் எளிமையான முறையில் பள்ளிகளுக்கு கட்டணமில்லாமல் பேருந்துகளில் சென்று கல்வி கற்பதற்காக இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தினை ஏற்படுத்தி செயல்படுத்தியுள்ளார்கள்.

பொதுமக்களின் நலன் சார்ந்தும் தேவை சார்ந்தும் இயக்கப்படும் பேருந்துகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.அய்யம்மாள், திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் திரு.திருமலைச்சாமி, கீரனூர் பேரூராட்சி தலைவர் திரு.கருப்புச்சாமி, வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜோதீஸ்வரன், பொது மேலாளர் திரு.துரைச்சாமி, வணிக மேலாளர் திரு.சக்தி, கோட்ட மேலாளர் திரு.ரமேஷ், தொழிற்நுட்ப மேலாளர்கள் திரு.சத்தியமூர்த்தி, திரு.சண்முககுமார், கிளை மேலாளர்கள் (ஒட்டன்சத்திரம்) திரு.சிவசாமி, (பழனி) திரு.ஜெயக்குமார், நகர் மன்ற உறுப்பினர் திரு.கண்ணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.