மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
.

செ.வெ.எண்:-28/2024

நாள்:-12.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாநாடு விழா தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்து துறை அலுவலர்களுடன், பழனி அருள்மிகு பழனியாண்டவர் (ஆண்கள்) கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் இன்று(12.08.2024) ஆலோசனை மேற்கொண்டனர்.

சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., அவரகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப அவர்கள், தவத்திரு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலாய சுவாமிகள், சிறவை ஆதீனம் உமாபதி, பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அ.பிரதீப், இ.கா.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் ஆகியோர் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் இடம், அரங்கம் அமையும் இடம், உணவுக்கூடம், பக்தர்கள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், அறுபடை வீடுகள் காட்சிக்கூடம், சிறு திரையரங்கம், தோரண வாயில்கள் அமைக்கப்படும் இடங்கள், நுழைவு வாயில் ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, பழனி அருள்மிகு பழனியாண்டவர் (ஆண்கள்) கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. சொன்னதை செய்திடும் அரசு திராவிட மாடல் அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதன்படி, மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநாட்டு திடலில் உள்கட்டமைப்பு வசதிகள், இருக்கை வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்கார அமைப்புகள், வழிகாட்டி பலகைகள், உணவு கூடம், ஓய்வுக் கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், பக்தர்கள் உணவு அருந்துவதற்கு ஏதுவாக கல்லுாரி வளாகத்தில் உள்ள உணவு அருந்தும் கூடங்களில் மராமத்து பணிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே கல்லுாரி வளாகத்தில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் மராமத்து செய்தல், மாநாடு நடைபெறும் வளாகம் முழுவதும் சுத்தமாக பராமரிக்கவும் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தவும் சுழற்சி முறையில் தேவையான எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்திடவும், பழனி நகராட்சி பகுதி முழுவதும் பழநி பேருந்து நிலையம், திருக்கோயில் வளாகம், மாநாட்டு வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் துாய்மைப்பணி மேற்கொள்ளவும், மாநாட்டிற்கு வருகை தரும் மூத்தக்குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென 11 இருக்க வசதி கொண்ட 5 பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநாட்டிற்கு வருகை தரும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு கல்லுாரி வளாகத்தில் பிரதான மாநாடு பந்தல் அமையவுள்ள இடமான மைதானத்தின் அருகிலேயே 200 எண்ணிக்கையிலான வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாகவும், கல்லுாரி வளாகத்தில் பின்புறம் கிழக்கு பகுதியில் 900 எண்ணிக்கையிலான இதர வாகனங்கள் நிறுத்தம் செய்யும் வகையிலும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தங்குவதற்கு உரிய விடுதி வசதியினை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநாடு தொடர்பாக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ள காவல் துறையினர் திட்டம் தயார் செய்து, போதுமான அளவில் காவலர்கள் மற்றும் பெண் காவலர்களை பணியமர்த்திடவும், பக்தர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களின் வாகனங்கள் உரிய வகையில் போக்குவரத்து சிரமமின்றி வந்து செல்வதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும், பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மாநாட்டு வளாகத்தில் தற்காலிக புறநகர் காவல்நிலையம் அமைக்கவும், தேவைப்படும் இடங்களில் உதவி மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்திடவும், மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி டிரோன் கேமராக்கள் பறப்பதை தடை செய்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

.

மாநாடு நடைபெறும் இடம் மற்றும் பழனி திருக்கோயில் கிரிவலப்பாதை உள்ள இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாம்கள் அமைத்து போதுமான மருத்துவ அலுவலர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தயார்நிலையில் வைத்திட மருத்துவத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடங்கள், மாநாட்டிற்கு வரும் பக்தர்கள் குளிக்கும் நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகனத்தை தயார்நிலையில் நிறுத்திட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கிட போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் இடம் மற்றும் முக்கிய பிரமுகர் தங்கும் இடங்களில் வழங்கப்படும் உணவுகளை சோதனை செய்து பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் பயன்படுத்தாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்ப்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறுவதையொட்டி 21.08.2024 முதல் 25.08.2024 வரை தடையற்ற மின் விநியோகம், திருக்கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் எவ்வித இடையூறுமின்றி மின் விநியோகம் செய்திட மின்சார துறை அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழனி மாநாடு நடைபெறும் இடத்திற்கு தேவையான இணையதள வசதிகள், பேக்ஸ் வசதிகள் ஏற்படுத்திட வேண்டும். அவசர கால தொடர்புகளுக்கு தேவையான தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, பழனியில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, முருக பக்தர்களாளல் பேசப்படும் அளவிற்கு இந்த மாநாடு பெருமை கொள்ளும், பெருமிதம் கொள்ளும் வகையிலும், இந்த நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக தமிழ்கடவுள் முருக பக்தர்கள் முழுமையாக பாராட்டும் விதமாக அமையும் வகையில், போக்குவரத்து வசதிகள், பக்தர்கள் வந்து செல்வதற்கான வசதிகள் என அனைத்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஆன்மீக சொற்பொழிவாளர்கள் திருமதி ஆண்டாள் பிரியதர்ஷினி, திருமதி கோ.செ.தேசமங்கையர்க்கரசி, அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.