மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024
.

செ.வெ.எண்:-59/2024

நாள்:22.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், எல்லப்பட்டி ஊராட்சியில் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணியினை இன்று(22.08.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம், என்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்துள்ளார்கள்.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க, நிரந்தர வீடுகள் வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்குவதற்காக “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. முதற்கட்டமாக 2024-25-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன.

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு உண்டு. சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதும் ஒரு கனவு. ஒரு பயனாளி வீடு கட்டுவது என்பது அவரது எதிர்காலத்திற்காக வாழ்நாளில் ஒருமுறை மேற்கொள்ளும் பணியாகும். இப்பயனாளிக்கு தகுதியிருப்பின் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.50,000 அல்லது கூட்டுறவு வங்கிகளில் குறைவான வட்டியில் ரூ.1.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது.

மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட 2.50 இலட்சம் வீடுகளை பழுது பார்க்க ரூ.2,000 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,328 வீடுகள் கட்டப்படவுள்ளன. இன்றையதினம், எல்லப்பட்டி ஊராட்சியில் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், 179 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

பெண்கள் முன்னேற்றத்திற்காக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற வகையில் வழங்கப்படும்.

விவசாயப்பணிகளை மேம்படுத்துவதற்காக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் திரு. நாகராஜ், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி காயத்ரிதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி சகுந்தலா பாலசந்தர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி செல்வி செல்லமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வடிவேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வாடிப்பட்டி திரு.ஜோதீஸ்வரன், எல்லப்பட்டி திருப.பாலசுப்பிரமணி, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.