மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், புதிய பகுதிநேர நியாயவிலைக்கடைகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 21/10/2024
.

செ.வெ.எண்: 44/2024

நாள்:-17.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், புதிய பகுதிநேர நியாயவிலைக்கடைகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள், பகுதிநேர நியாயவிலைக்கடைகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை இன்று(17.10.2024) வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதொடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 17.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 54,896 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக்கடைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் கண்கருவிழி பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 28,000 நியாயவிலைக் கடைகளில் கண் கருவிழி பதிவு கருவி பொருத்தப்பட்டுள்ளன.

நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. கறுப்பு, பழுப்பு இல்லாத அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக 676 அரிசி அரவை ஆலைகளிலும் கலர்சாப்டர் இயந்திரம் பொருத்தப்பட்டு தரமான அரிசி வழங்கப்படுகிறது.

தமிழகத்திற்கு மாதம் 8000 மெ.டன் கோதுமை வழங்கப்படுகிறது. அதை 25,000 மெ.டன் அளவிற்கு உயர்த்தி வழங்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடப்பட்டது. அதன்பயனாக தற்போது 17,100 மெ.டன் கோதுமை வழங்க ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. இந்த மாதம் முதல் கூடுதல் கோதுமை நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரும்.
தமிழகத்தில் கடந்த 42 மாதங்களில் 2,500 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு 64 முழுநேர நியாயவிலைக்கடைகள், 173 பகுதிநேர நியாயவிலைக் கடைகள், 7 நடமாடும் நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 244 நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுவடி செய்யப்பட்டன. மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கூட்டுறவு கடன் தொகை ரூ.12.00 இலட்சத்திலிருந்து ரூ.60.00 இலட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு குறைக்கப்பட்டு, சேமிப்பு ஏற்படுகிறது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் பயனாக தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளதுடன், மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி பயில வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் என நோயாளிகளின் வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், யாராவது விபத்தில் சிக்கி காயமடைந்தால் அவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும். சிகிச்சைக்கு வழங்கப்பட்ட செலவுத்தொகை ரூ.1.00 இலட்சத்திலிருந்து ரூ.2.00 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 650 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இன்றையதினம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், உலுப்பகுடியில் ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார கட்டடம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலம்பட்டி ஊராட்சி, சேர்வீடு மற்றும் ஆவிச்சிபட்டி ஊராட்சி, நடவனுார் கிராமங்களில் தலா ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டங்கள், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சி இடையப்பட்டியில் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், பரளிபுதுார் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.38.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், நத்தம் பேரூராட்சியில் வாணியர் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.37.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் என மொத்தம் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் மற்றும் குட்டூர், செல்லப்பநாயக்கன்பட்டி, சம்பைப்பட்டி, கம்பிளியம்பட்டி, கோவில்பட்டி ஆகிய கிராமங்களில் புதிய பகுதிநேர நியாயவிலைக்கடைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(17.10.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்து முதலமைச்சராக திகழ்கிறார். பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 10 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், 8 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்ட மருந்துகள், 32 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சு.ஜெயசித்ரகலா, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.ஆர்.செல்வக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.விஜயன், நத்தம் பேரூராட்சித் தலைவர் திரு.சேக்சிக்கந்தர் பாட்சா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குமாரவேல், திரு.மகுடபதி, நத்தம் வட்டாட்சியர் திருமதி த.விஜயலட்சுமி, சிறுமலை ஊராட்சி மன்ற தலைவர் திரு.வெள்ளிமலை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.