மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது.
செ.வெ.எண்:-41/2025
நாள்: 11.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது.
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் இன்று(11.09.2025) திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க்கனவு” 99-வது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழர் மரபும்-நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப்புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும்.
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான (03.02.2023) அன்று தொடங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன.
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும், தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும், வளரும் தலைமுறையினருக்கு பண்பாட்டின் முக்கியக் கூறுகளான கலை, இலக்கியம், கல்வி இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது, இதன் மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்து வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும் என்ற நோக்கதோடு சிறந்த சொற்பொழிவாளர்கள் கொண்டு 200 கல்லூரிகளில் தமிழ்நாடு முழுவதும் “மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு” நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்ப் பெருமிதங்களைப் பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் தாங்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் ஆளுமைகள் பேருரை நிகழ்த்துவார்கள். மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் புத்தகக்காட்சி ‘நான் முதல்வன்’ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன.
இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி ‘தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய கையேடுகள் வழங்கப்படுகின்றன.‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளிக்கும் மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழ்களும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்படுகிறது.
சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பும் மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வின் 99-வது சொற்பொழிவு கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு மொழியின் ஆற்றலைப் பொறுத்துக் கலையறிவும். அக்கலையறிவின் ஆற்றலைப் பொறுத்து நாகரிகமும், பண்பாடும் சிறக்கும். தமிழ்நாட்டை பலர் ஆண்டாலும், அவர்களால் அழிக்கமுடியாத ஒன்றாத் தமிழ்மொழி இன்றளவும் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் மொழியுணர்வே. இம்மொழியுணர்வைப் பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் தமிழின் தொன்மை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியதை நினைவு படுத்துகின்றேன்.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி தமிழ் குடி அந்நிய மொழிக்கல்வி ஒருவனைத் தாய்மொழியில் இருந்து – தாய் நாட்டில் இருந்து அந்நியப்படுத்திவிடும். ஒருவனுடைய இயல்பான அறிவு வளர்ச்சிக்கும். உணர்ச்சிக்கும், உரிமை வாழ்வுக்கும் ஏற்றது அவன் தன் தாய்மொழியே. தமிழ்பேசு; தமிழிலே பாடு.. நீ தமிழினிற் பாடியே ஆடு தமிழ்ப்பாட்டையே காதிற்போடு – தமிழ் தப்பினால் உன்காதை மூடு எனவும் கூறுகிறார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது. சோதிமிக்க நவகவிதை……எனப் புதுக்கவிதைக்கு புதிய பாதையையும், பொருளையும் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தந்தவர் பாரதியார். காளிதாசனாய். சக்திதாசனாய். ஷெல்லிதாசனாய் விளங்கிய பாரதியின் கவிதையில் மயங்கி பைந்தமிழ்ப் தேர்ப்பாகன் அவனொரு செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை எனப் பாராட்டிப் பாரதிக்குத் தாசனாய் மாறியவர் பாவேந்தர். இவ்விருவருமே இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இருகவிஞர்கள். அவர்தம் படைப்பில் தமிழ்குறித்தும், தமிழ்வளர்ச்சிக்குச் செய்ய வேண்டுவன யாவை என்பது குறித்தும் நாம் அறிய வேண்டிய செய்திகளை இங்கு எடுத்துரைப்பதில் பெருமை கொள்கிறேன்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்தச் சொன்ன பாரதியின் வழியைப் பின்பற்றி, தமிழுக்கும் அமுதென்று பேர் என்று அதன் இனிமையைக் கூறினாலும் பாவேந்தருக்குத் தமிழ் உயிர் போன்றது என்பதைப் பலமுறை கூறியுள்ளார். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடினார் பாரதி…மொழி வெறும் கருவி அல்ல. அது மனிதனின் பண்பு, அறிவு, உள்ளம் அனைத்தையும் வடிவமைக்கும் தன்மை கொண்டதாகும்.
எழிலார்ந்த கடற்கரை ஓரத்தில் தமிழுக்கு ஏற்றம் தந்த தமிழ்ப் பெருந்தகையர்களின் திருவுருவச் சிலைகளை நிறுவினார்கள். இங்கே குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி வடமொழி வல்லாண்மையில் நலிந்து கொண்டிருந்த தமிழை, பிற மொழிச் சொற்களின் கலப்பில் சிக்குண்டு நலிந்திருந்த தமிழை எழுத்தோவியங்களால், புதுப்புதுச் சொற்களை உருவாக்கி தமிழில் புகுந்த பிறமொழிச் சொற்களான, ’அக்ராசனாதிபதி’ யைக் – ’குடியரசுத் தலைவர்’ என்றும் ’அபேட்சகரை’ – ’வேட்பாளர்’ எனவும் ’ஓட்டு’ என்பதை ’வாக்கு’ எனவும் ’பார்லிமென்ட்’ என்பதை ’நாடாளுமன்றம்’ எனவும் ’ராஜ்யசபை’ என்பதை ’மாநிலங்களவை’ என்றும் தமிழ்ச் சொற்களைப் பொன் எழுத்துக்களால் பொறித்தவர்கள் நம் தலைவர்கள். 1967 இல் சென்னை மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயரிடப்பட்டது. 24.11.1967 முதல் திருக்குறள் கூறி சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி தொடங்கும் முறை திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு கடைப்பிடிக்கப்படும் வழக்கம் 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. புத்தகச் சந்தையை நடத்தும் ‘பப்பாசி’ அமைப்புக்குக் கலைஞர் அவர்கள் ஒருகோடி ரூபாய் வைப்புத் தொகை அளித்துள்ளார். இத்தொகை மூலம் சிறந்த பதிப்பகங்களுக்கும் சிறந்த எழுத்தாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
‘குறளோவியம்’, ‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’ முதலிய கலைஞரின் படைப்புகள் மாணவர்களிடமும் பொது மக்களிடமும் தமிழை வளர்ப்பதற்குப் பயன்பட்டு வருகின்றன. மதராஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் இருந்த மாநகராட்சி ‘சென்னை மாநகராட்சி‘ என்று பெயர் மாற்றப்பட்டது. “மெட்ராஸ்” என்னும் பெயர் “சென்னை” என 30.9.1996 அன்று மாற்றப்பட்டது. உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக நடைமுறைப்படுத்திடத் தனிச் சட்டம். 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைவருக்கும் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம். தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு. “தமிழ் செம்மொழி” என அறிவிக்கப்பட்டு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் 2010ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த பணிகள் 1967இல் அரசுப் பேருந்துகளில் அய்யன் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பொறிக்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த பொதுப் பணித்துறை ஓய்வு விடுதிகளில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது. 01.02.1970 முதல் தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழில் அர்ச்சனைகள் தொடங்கப்பட அரசாணை வெளியிடப்பட்டது. 29.9.1970 அன்று வானொலி நிலையங்களில் ‘மதராஸ்’ என்பதற்குப் பதிலாக, “சென்னை வானொலி நிலையம்” என அறிவிக்கும் நடைமுறை தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் – கலைஞர் ஆணை 1970 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், “இனித் தமிழ்நாடு அரசின் நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறை வணக்கம் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாக இருக்குமென்றும், ‘நீராருங் கடலுடுத்த’ எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய அந்தப் பாடலே, அந்த வாழ்த்தாக அமையும்“ என்றும் அறிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாள்தோறும் காலையிலும், மாலையிலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வள்ளுவரின் குறள், இசைக்க வழிவகை. 1996-இல் நான்காவது முறையாக கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றபோது தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகம். அகரமுதலித் திட்ட இயக்ககம் 1974இல் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்“. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ரூ.1,000/-. அயலக தமிழர்களுக்கு அஞ்சல்வழிக் கல்வி – தமிழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தமிழில் முதலிலும், ஆங்கிலத்தில் அடுத்தும் அமைக்கப்பட்டது.
கல்வி வளம் உள்ள நாடே வல்லரசாக முடியும் UNESCO அறிக்கை. எனவே தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவரும் கற்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் காலை உணவுத் திட்டம், நான்முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு உயர்கல்வியில் சேரக்கூடிய மாணவர்களுடைய எண்ணிகையில் (Gross Enrollment Ratio) 50%க்கு மேல் பெற்று இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ் மரபையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க்கனவு என்னும் நிகழ்வு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டு நடை பெற்று வருகிறது.
தமிழ் எழுத்தாளர்களுக்குக் கலைஞர் கனவு இல்லம் திட்டம் கீழ் சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட நான்கு முக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் ஊர்களில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு, கலைஞர் செம்மொழி விருது (பத்து வருடங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது) தற்போது 10 பேருக்கு தலா ரூ.10.00 இலட்சம் என மொத்தம் ரூ.1.00 கோடி வழங்கப்படுகிறது என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்ப்பெருமிதம் சிற்றேட்டிலுள்ள குறிப்புகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச்செல்வி, பெருமிதச்செல்வன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும், சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவர்களைக் பாராட்டி கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் என்ற சான்றிதழ் மற்றும் பரிசுப் புத்தகங்களையும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் பி.பொன்முத்துராமலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் திரு.K.M.சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் திரு.க.ரவிசங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.