மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
செ.வெ.எண்:-35/2025
நாள்: 10.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் இன்று(10.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் நிதி கிடைக்காத நிலையிலும், மாநில அரசு நிதியிலிருந்து மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். எனவே, மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் மனுக்கள் வழங்க வேண்டும்.
60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்.
அமைச்சர்கள் மக்களை தேடி சென்று அவர்கள் வழங்கும் மனுக்களை பெற்று உடனே அம்மனுக்களின் மீது தீர்வு கண்டு அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,000 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. அதில் ஆத்தூர் வட்டத்தில் 3000 கலைஞர் கனவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, வீடு இல்லாதவர்கள் இம்முகாமில் மனுக்கள் வழங்கி இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் கட்டித் தருவதற்கான ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம்.
இன்றைய தினம் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் 46 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்றைய தினம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் தற்போது வரை 8 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத்துறையின் சார்பில் கலைஞர் காப்பீட்டு திட்டம் இருந்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, உடல்நிலை சரியில்லை என்றால் சிகிச்சை மேற்கொள்ள ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம். மேலும், உயர் சிகிச்சை மேற்கொள்ள தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பெண்களின் நலனில் மிகுந்த அக்கரை கொண்டுள்ளது எனவே, தேவைப்படுபவர்கள் மனுக்கள் வழங்க வேண்டும். அம்மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
இந்த பகுதி பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வழங்கி உள்ளார்கள். இந்த கோரிக்கைகளை விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பகுதியில் ஒன்றிய அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைவில் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எல்லா தரப்பு மக்களுக்கும் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமம். எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள் மாண்புமிகு முதலைமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.ஜெயபிரகாஷ், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கண்ணன், திரு.மலரவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.