மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்.
செ.வெ.எண்:-83/2026
நாள்: 29.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்
சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் 600 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் இன்று (29.01.2026) 600 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார்.
முன்னதாக, சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கலையரங்கத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற நோக்கில் செயலாற்றி வருகிறார்கள்.
மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோதுஇ அண்ணா பொறியியல் கல்லூரியின் கிளையினை ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தொடங்கி வைத்தார்கள். மேலும்இ நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்இ ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளையும் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தற்போது அனைத்துப் பள்ளிகளும் மேல்நிலைப் பள்ளிகளாக செயல்பட்டு வருகிறது.
மேலும், நான் 1969-ஆம் ஆண்டு கல்லூரி சென்று பயின்ற காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் அமெரிக்கன் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, மதுரை கல்லூரி என 3 கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அந்த காலகட்டத்தில் கல்லூரியில் பயில்வது என்பது மிகவும் சிரமமாகும். இதனை கருத்திற்கொண்டுதான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களிடத்தில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஒரு கூட்டுறவு கலைக் கல்லூரி அமைத்தால் கிராமப்புற மாணவ-மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தபோது உடனடியாக கல்லூரி அமைப்பதற்கு இசைவு தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தியத்தில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களிடத்தில் ஒப்புதல் பெற்றதைத் தொடர்ந்து கல்லூரி அமைப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 27.01.2026-அன்று பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு விளையாட்டு மைதானம் அமைத்து விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, தற்போது நகரங்களை நோக்கிதான் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் செல்கின்றன. எனவே, தனியார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் கலந்தோசித்து இக்கல்லூரிக்கு அருகாமையில் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனெனில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதே இதன் நோக்கமாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் 05.01.2026-அன்று சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில இறுதி ஆண்டு பயிலும் 2,321 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மடிக்கணிணிகள் வழங்கும் விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இன்றைய தினம் சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் மடிக்கணிணிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், விரிந்த இந்த உலகத்தில் உலகத்தை உங்கள் கைகளில் அடக்கும் வகையில் மடிக்கணிணிகள் வழங்கும் ”உலகம் உங்கள் கையில்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து உலகத்தை உள்ளடக்கிய மடிக்கணிணிகள் உங்கள் கையில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களுடைய அறிவாற்றலை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் எல்லா வகையிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் கீழ், 88 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். மேலும், பெண்களின் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை படித்து முடித்து கல்லூரி படிப்பு படிக்க செல்லும் மாணவியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கும் ”புதுமைப்பெண்” என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள். மேலும், மாணவர்களுக்கும் ”தமிழ் புதல்வன்” என்ற திட்டத்தின் மூலமாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்வியை எந்த ஒரு தங்கு தடையின்றி தொடர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள்.
மேலும், படித்து நல்ல வேலைக்கு சென்றாலும் நமது ஊரில் ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். நமது பெற்றோர்களுடன் மழை, வெள்ளம், வெயில் ஆகிய காலங்களில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு நல்ல வீடு என்பது அனைவரின் கனவாகும். அந்த கனவை நனவாக்கும் நோக்கில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 2 இலட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து. தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களின் முன்னெடுப்பின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் வழங்கியுள்ளார்கள். மேலும், நகரங்களில் உள்ள சாலைகளை போன்று கிராமப்புற சாலைகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளி, மருத்துவமனை, அங்காடி, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ”உலகம் உங்கள் கையில்” திட்டமானது ஒரு உன்னதமான திட்டமாகும். தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கக்கூடிய இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு முதல் கட்டமாக 11 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. தற்போது வரை 5 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறையினர்கள் பயன்பெறும் வகையில் கடந்த 5 ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 கல்லூரிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், ஆத்தூர் தொகுதியில் மட்டும் 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள டைடில் பார்க் போன்ற நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரகள் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு கல்லூரி படிப்பை நல்ல முறையில் படித்து நல்ல பணிக்கு சென்று தங்கள் குடும்பத்தினை நல்ல முறையில் கொண்டு செல்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. பெ.திலகவதி, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஸ்ரீராகவ் பாலாஜி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.சுபாஷினி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

