மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் – இலவச பட்டா விநியோகம்.
செ.வெ.எண்: 08/2026
நாள்: 04.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாநராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியை சேர்ந்த 143 பயனாளிகளுக்கும் மற்றும் பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த 126 பயனாளிகளுக்கும் என மொத்தம் 269 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (04.02.2026) திண்டுக்கல் மாநராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியை சேர்ந்த 143 பயனாளிகளுக்கும் மற்றும் பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த 126 பயனாளிகளுக்கும் என மொத்தம் 269 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
தொடர்ந்து, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட குடைப்பாறைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பெண்களின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், ஆண்டுதோறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்து கடனுதவிகளை வழங்கி வருகிறார். இக்கடனுதவிகளை பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் குழுக்களாகச் சேர்ந்து சிறுதொழில்கள் ஆரம்பித்து வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலும் தமிழ்நாட்டில் 1 இலட்சம் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் கட்டுவதற்கு நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தகுதியான நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில், திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 09.01.2026-அன்று ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார். தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி.ஜோ.இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராஜப்பா, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.திருமலை, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.ராஜேந்திரன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.