மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் புதிய நியாய விலைக்கடையைத் திறந்து வைத்தார்.
செ.வெ.எண்: 16/2026
நாள்: 08.02.2026
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் அகரம் தேர்வுநிலை பேரூராட்சி உலகம்பட்டியில் புதிய முழுநேர நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், அகரம் தேர்வுநிலை பேரூராட்சி உலகம்பட்டியில் புதிய முழுநேர நியாயவிலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (08.02.2026) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1,500 ரேசன் அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக்கடை என்ற விகிதத்தில் நியாய விலைக்கடைகள் இருந்தன. தொடர்ந்து, மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 100 ரேசன் அட்டைகளுக்கு ஒரு நியாய விலைக் கடையினை உருவாக்கி வருகிறார்கள்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலும் தமிழ்நாட்டில் 1 இலட்சம் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சுமார் 20 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்து முதல் கட்டமாக 10 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.01.2026-அன்று தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்.
இன்றைய தினம் அகரம் தேர்வுநிலை பேரூராட்சி உலகம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு திட்டம் 2024-2025 கீழ் ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முழுநேர நியாயவிலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைய செய்வதிலும், வளர்ச்சித் திட்டப்பணிகளை அனைத்துப் பகுதிகளிலும் சீராக நிறைவேற்றுவதிலும் இந்த அரசு உறுதியாக உள்ளது. இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கருத்தை வலுப்படுத்தும் விதமாக அவருக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை பதிவாளர் (பொது விநியோக திட்டம்) திரு.கார்த்திக்கேயன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.