மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/03/2026

செ.வெ.எண்: 41/2026

நாள்: 12.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 355 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இன்று (12.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 355 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது :-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தகுதியான நபர்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழியில், திண்டுக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் (07.05.2021) முதல் தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தை சேந்த 1,32,501 பயனாளிகளுக்கு ரூ.107.57 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஆத்துார் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 8,887 பயனாளிகளுக்கு ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், இன்றைய தினம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 355 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச வீடுமனைப் பட்டாக்களை பெறும் பயனாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆகவே, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு கட்டவில்லை என்றால் அந்த இடத்தை அரசுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டும். இதனை கருத்திற்கொண்டு பயனாளிகள் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக வீடு கட்டுவதற்கான ஆணையினை பெற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலும் தமிழ்நாட்டில் 1 இலட்சம் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் கட்டுவதற்கு நிதியொதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கோ.பழனிவேல், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர், ரெட்டியார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மலரவன், திரு.கண்ணன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.