மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், விவசாயிகள் பயன்பறும் வகையில் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 20/09/2024

செ.வெ.எண்:-53/2024

நாள்:20.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், விவசாயிகள் பயன்பறும் வகையில் மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையத்தில் மருதா நதி அணையில் இருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் இன்று(20.09.2024) திறந்து வைத்தார்.

அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று(20.09.2024) முதல் 120 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 20 கன அடியும், முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 70 கன அடியும் ஆக மொத்தம் நாளொன்றிற்கு விநாடிக்கு 90 கன அடிக்கு மிகாமலும் என்ற வகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்துார் வட்டத்தில் அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி ஆகிய பகுதிகளில் 5943 ஏக்கர் நிலங்களும், நிலக்கோட்டை வட்டத்தில் சேவுகம்பட்டி. கோம்பைபட்டி ஆகிய பகுதிகளில் 640 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 6,583 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மருதாநதி அணையின் உயரம் 74.00 அடி. தற்போதைய நீர்மட்டம் 71.00 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 188.5 மில்லியன் கன அடியாகும். தற்போதைய நீர் இருப்பு 169.000 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்படும்.

மேலும், மருதாநதி அணை அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. மருதாநதி அணையிலிருந்து தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.

மருதாநதி அணை கீழ் பகுதியான வடக்கு வாய்க்கால், தெற்குவாய்க்கால் சீரமைப்பு தொடர்பாக வேறு ஒரு திட்டம் மூலம் ஆக்கப்பூர்வமான செயல் வடிவம் உருவாக்கப்படும். இதுதொடர்பாக விவசாயிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிமராமத்து பணிகள் விவசாயிகளின் 10 சதவீதம் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசு சார்பில் முழுமையான குடிமராமத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மோட்டார் தொழில்களுக்கு உகந்த இடமாக தமிழகம் உருவாக்கப்பட்டது. அதேபோல், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, விவசாயப்பணிகள் மேம்பாட்டுக்காக 1972-ஆம் ஆண்டு மருதாநதி அணை அமைக்கப்பட்டது.

அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் தொழில் வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உற்பத்தி அதிகரித்து, அதன்மூலம் மாநில வருவாய் உயர்ந்து வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் விவசாய பாசனத்திற்காக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருவதால் தட்பவெப்ப நிலை விவசாயத்திற்கு சாதகமாக மாறி வருகிறது. இதனால் தமிழகத்தில் விவசாயம் நடைபெறாத பகுதிகளில் கூட விவசாயப் பணிகள் மேற்கொள்ளும் வகையில் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு, விவசாயிகளுக்குரிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்துள்ளது, என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திரு.மு.பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், அய்யம்பாளையம் பேரூராட்சித்தலைவர் திருமதி ரேகா ஐயப்பன், மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திரு.சரவணன், உதவி செயற்பொறியாளர் திரு. செல்வம், உதவி பொறியாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.