மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்தூர் அரசு மருத்துவமனையினை நேரில் பா
செ.வெ.எண்:-02/2025
நாள்: 03.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்தூர் அரசு மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்தி ராஜன் அவர்கள் முன்னிலையில் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று(03.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகின்ற அக்டோபர் 9-ந் தேதி வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், அக்டோபர் 8-ந் தேதி அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் மற்றும் (விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு) கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டடத்தில் 4556 சதுர அடிகள் தரைதளம், 4526 சதுர அடிகள் முதல் தளம், 441 சதுர அடிகள் இரண்டாம் தளம், 1111 சதுர அடிகள் சாய்வு தளம், 588 சதுர அடிகள் முகப்பு மண்டபம் என மொத்தம் 11,200 சதுர அடிகள், 1076 சதுர அடிகள் பிரேத பரிசோதனை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
தரைதளத்தில் முகப்பு அறை, பதிவு அறை, காவலர் விசாரணை அறை, சிகிச்சை பிரிவு, செவிலியர் அறை, சிடி ஸ்கேன் அறை, எக்ஸ்ரே அறை, ஆய்வகக்கூடம், மின் அறை, பெண்களுக்கான கழிப்பறை, கட்டு கட்டும் அறை, விபத்து சிகிச்சை பிரிவு, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, பணியாளர் பதிவு செய்யும் அறைகளும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சை பிரிவு, நோயாளி மீட்பு அறை, தொற்றுத்தடை காப்பு பரிவு, கழிப்பறையுடன் கூடிய நோயாளி சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் பராமரிப்பு பிரிவு, மருத்துவர் உடை மாற்றும் அறை, செவிலியர் உடை மாற்றும் அறை, ஆட்டோகிளேவ் அறை, கழிப்பறையுடன் கூடிய செவிலியர் அறை, வார்டு, ஆண்களுக்கான கழிப்பறை, மின் அறைகளும், பிரேத பரிசோதனை அறை, கழிப்பறையுடன் கூடிய மருத்துவர் அறை, காவலர் விசாரனை அறை, குளிர்பதன கிடங்கு மற்றும் தீயணைப்பு வசதிகள், ஆக்ஸிஜன் குழாய் வசதிகள் மற்றும் ஆழ்துளை கிணறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு நடத்த உள்ளதை முன்னிட்டு, அது தொடர்பான முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(03.10.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கோட்டைக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.