மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுவிநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள் வழங்குவதற்காக ரூ.10,500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்கள், புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி வைத்து, ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 04/09/2024
.

செ.வெ.எண்:-85/2024

நாள்:30.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுவிநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள் வழங்குவதற்காக ரூ.10,500 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்கள், புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி வைத்து, ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் இன்று(30.08.2024) புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி வைத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி, புதியதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம், என்ற வகையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தி சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

தமிழக அரசு விவசாயிகள் நலம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில்தான் வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்கள், தட்டுப்பாடு இன்றி, நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக நியாயவிலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொதுவிநியோக திட்டத்தில் மானிய விலையில் பொருட்கள் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.10,500 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகம் பயனடையும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு, 45,145 பயனாளிகளுக்கு ரூ.525.90 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 53,899 பயனாளிகளுக்கு ரூ.193.77 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்டத்தின் கீழ் 3,793 குழுக்களைச் சார்ந்த 34,833 நபர்களுக்கு ரூ.87.66 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2023-2024-ஆம் நிதியாண்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர்க்கடன் 57,716 உறுப்பினர்களுக்கு ரூ.832.47 கோடி அளவிற்கும், மகளிர் சுய உதவிக்குழு கடன் திட்டத்தின் கீழ் 3356 குழுக்களில் உள்ள 34,422 உறுப்பினர்களுக்கு ரூ.166.78 கோடி கடனும், 625 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.274.05 இலட்சம் கடனுதவியும், ஆதிதிராவிடர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த 292 நபர்களுக்கு ரூ.165.00 இலட்சம் தாட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.

.

.

சிறுபான்மையினர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் 1516 நபர்களுக்கு ரூ.997.00 இலட்சம் டாம்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் 1478 நபர்களுக்கு ரூ.1224.00 இலட்சம் டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் கூட்டுறவுத்துறையின் மூலம் பயிர்க்கடன் 11,093 உறுப்பினர்களுக்கு ரூ.167.84 கோடி அளவிற்கும், மகளிர் சுயஉதவிக்குழு கடன் திட்டத்தின் கீழ், 682 குழுக்களில் உள்ள 6,922 உறுப்பினர்களுக்கு ரூ.148.13 கோடி கடனும், 216 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.869.00 இலட்சம் கடனும், ஆதிதிராவிடர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 47 நபர்களுக்கு ரூ.3.96 இலட்சம் தாட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் 191 நபர்களுக்கு ரூ.35.04 இலட்சம் டாம்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறுதொழில் செய்ய குறைந்த வட்டியில் 88 நபர்களுக்கு ரூ.6.11 இலட்சம் டாப்செட்கோ கடன் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதியிலேயே குடிமைப்பொருட்கள் பெற ஏதுவாக புதியதாக 50 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 130 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் என ஆகமொத்தம் 180 நியாயவிலைக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், 48 முழுநேர நியாயவிலைக் கடைகளும் 126 பகுதிநேர நியாயவிலைக்கடைகளும் என ஆகமொத்தம் 174 நியாயவிலைக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மண்டலத்தில் 33 நியாயவிலைக் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 16.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் 93,396 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 52,794 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டைகோரி பெறப்பட்ட 8,858 விண்ணப்பங்களில் 3,933 விண்ணப்பங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. சரிபார்ப்பு பணி முடிவடைந்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படவுள்ளது.

மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கூட்டுறவு கடன் தொகை ரூ.12.00 இலட்சத்திலிருந்து ரூ.30.00 இலட்சம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது. முதியோருக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆடு, மாடு என கால்நடை வளர்ப்பு கடன்கள் வழங்கப்படுகின்றன.

இன்றையதினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் வாகரை, கொழுமங்கொண்டான், தாளையூத்து மற்றும் கீரனுார் பேரூராட்சி ஆகிய இடங்களில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தாளையூத்து ஊராட்சி, சப்பளநாயக்கன்பட்டியில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், தும்பலப்பட்டி ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தை ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் நவீன மயமாக்கும் பணிகள், கரியாம்பட்டி, தொப்பம்பட்டி, மானுார் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தலா ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் என மொத்தம் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், விவசாயகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட 676 அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் 8 இலட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6,445 வீடுகள் கட்டப்படவுள்ளன.

மேலும், தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் 2.50 இலட்சம் வீடுகளை பழுது பார்க்க ரூ.2,000 கோடி நிதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், அரசு நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 6 கல்லுாரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காக, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 22 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் ஆத்துார் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தலா ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயப்பணிகளை மேம்படுத்துவதற்காக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கா.பொன்ராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி சு.ஜெயசித்ரகலா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.