மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், சிறுமலை பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

செ.வெ.எண்:-50/2025
நாள்:-16.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், சிறுமலை பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதியில் இன்று(16.04.2025) பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காந்திராமம் கிராமிய பல்கலைக்கழக மாணவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழத்தில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பேருந்தில் சிறுமலை பகுதிக்கு சமூகவியல் கல்வி களஆய்வுக்காக இன்று(16.04.2025) காலை சென்றனர். பின்னர் மாலை அவர்கள் திரும்பும்போது, 4வது கொண்டை ஊசி வளைவில் வரும்போது, பேருந்து திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் மற்றும் 28 மாணவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் மாணவர்களுக்கான சிகிச்சை விரைவுபடுத்தப்பட்டு, உரிய உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் டிரைவர் மற்றும் ஒரு மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதுபோக இரண்டு மாணவர்களுக்கு கை மற்றும் தோல்பட்டை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் “எல்லோ சோன்“ எனப்படும் மஞ்சள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மற்ற மாணவர்களுக்கு லேசான சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களையும் 24 மணி நேரம் கண்காணிப்பில் வைத்து, அதன் பின்னர் டிஸ்சார்ச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோன்ற மலைப்பகுதிகளில் செல்லும் வாகனங்களில் டிரைவர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு விபத்து பகுதிகள், வளைவு பகுதிகள் குறித்து கூடுதலாக எச்சரிக்கை பலகைகள் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் வருங்காலத்தில் விபத்துக்களை தவிர்க்க முடியும். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், மாநகராட்சி துணை மேயர் திரு.ராசப்பா, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி மீனாதேவி உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.