மூடு

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர்

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2024
.

செ.வெ.எண்:-22/2024

நாள்:-09.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர்

கொடைக்கானலுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள மாற்றுப்பாதை வழித்தடப் பணிகள் உட்பட பல்வேறு சாலை திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள மாற்றுப்பாதை வழித்தடப் பணிகள் உட்பட பல்வேறு சாலை திட்டப் பணிகளை இன்று(09.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு கூடுதல் தலைமைச் செயலர் திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள், அரசு செயலர்(நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) மரு.ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், மதுரை(வடக்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உத்தரவின்பெரில் தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அந்தந்த பணிகளுக்கு செலவிடப்பட்டு, பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற 2021-ஆம் ஆண்டில் 1281 தரைப்பாலங்கள் இருந்தன. இந்த தரைப்பாலங்களை மேம்படுத்தி உயர்மட்ட பாலங்களாக மாற்றும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 1,113 தரைப்பாலப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டதில் 871 பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 242 பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024-25-ஆம் ஆண்டில் 168 தரைப்பாலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

புறவழிச்சாலைப் பணிகளை பொறுத்தவரை, தற்போது 119 புறவழிச்சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் 21 புறவழிச்சாலைகள் ரூ.550.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன. 42 புறவழிச்சாலைப் பணிகள் ரூ.4029.00 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 21 புறவழிச் சாலைப் பணிகளுக்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 35 பணிகளுக்கு ரூ.12.00 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு சாலைத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொடைக்கானல் ஏரிச்சாலை, பவர் பாய்ண்ட் விளக்கக் காட்சி, கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக வில்பட்டி – கோவில்பட்டி – டிவிஎஸ் லே அவுட் பகுதி, பழனி – தாராபுரம் சாலையில் புதிய உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்தும், பழனி – தாராபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 272 பணிகள் ரூ.563.00 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றில் 249 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் 67 பணிகள் ரூ.100.00 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளது. தரைப்பாலங்களை உயர்மட்ட பாலமாக மாற்றும் பொருட்டு 15 பணிகள் ரூ.9.00 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் ஊராட்சி ஒன்றிய சாலையினை மாவட்ட இதர சாலையாக தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், 123 சாலைகள் ரூ.310.00 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 116 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு ஆண்டில் 67 ஊராட்சி ஒன்றிய சாலைகள் தரம் உயர்த்தும் பணிக்காக ரூ.145 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் வத்தலகுண்டு – கொடைக்கானல் சாலையில் 11 கொடைக்கானல் சாலையில் 11 இடங்களிலும், கொடைக்கானல் – பழனி சாலையில் 11 இடங்களிலும் ஆபத்தான வளைவுகள் கண்டறியப்பட்டு உருளை விபத்து தடுப்பான் அமைக்கும் பணிகள் ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 2024-25-ஆம் நிதியாண்டில் மலைச்சாலைகளில் ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் 4 இடங்களில் நவீன மண் ஆணி முறையில் மண் சரிவை தடுப்பதற்கு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த 2 தொழில்நுட்பங்களும் ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் பரிச்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டதில் திருப்தியான முடிவை தந்துள்ளன.

முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.344.00 கோடி மதிப்பீட்டில் 8 பணிகள் எடுக்கப்பட்டதில் 7 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பணி நடைபெற்று வருகிறது. 2024-2025-ஆம் நிதியாண்டில் ரூ.17.00 கோடி மதிப்பீட்டில் 3 கி.மீட்டர் நீளம் சாலை தேர்வு செய்யப்பட்டு, ஒப்பந்தம் பரிசீலனையில் உள்ளது.

திண்டுக்கல் மாநகர் புறவழிச்சாலை பணியில் திண்டுக்கல் மாநகருக்கு 19 கி.மீட்டர் நீளமுள்ள புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு, 7 கிராமங்களை உள்ளடக்கிய நில எடுப்பு பணிக்கு ரூ.55.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நில எடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த புறவழிச்சாலை அமைக்க 2024-25 நடப்பு நிதியாண்டில் முதல் கட்டமாக 11.00 கி.மீட்டர் நீளத்திற்கு பணிகள் தொடங்க ரூ.134.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானல் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்துதல் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 3 இடங்களில் பாலங்கள் கட்டுதல், 10 இடங்களில் சாலை சந்திப்புகள் மேம்படுத்துதல் மற்றும் சாலை குறுகலாக உள்ள இடங்களில் நவீன முறையில் சாலைகளை அகலப்படுத்துவதற்கு கருத்துருக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இரயில்வே மேம்பாலங்களை பொறுத்தவரை, திண்டுக்கல் – மணக்காட்டூர் சாலையில் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரூ.88.00 கோடி திட்ட மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைத்தல் பணி முடிவுற்று, இதர பணிகளான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் – குஜிலியம்பாறை சாலையில் ரூ.22.00 கோடி மதிப்பீட்டில் பிரதான சுரங்கப்பாதை பணிகள் முடிவுற்று இதரப்பணிகளான பயனுறுச்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை பணிகளை பொறுத்தவரை, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4 பணிகள் ரூ.296.00 கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 3 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணி நடைபெற்று வருகிறது.

இரயில்வே மேம்பாலப்பணிகளை பொறுத்தவரை, 01.04.2021-ஆம் ஆண்டில் 62 இரயில்வே மேம்பாலப் பணிகள் நிலுவையில் இருந்தன. அதில் தற்போது வரை 24 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 27 பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பணி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 10 பணிகளில் நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அரசு பொறுப்பேற்று 2022-2023-ஆம் ஆண்டு 10 பணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் நிலஎடுப்பு முடிவுற்று 9 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு பணி நில எடுப்பில் உள்ளது. 2024-2024-ஆம் ஆண்டு 4 பணிகள் அறிவிக்கப்பட்டன. அதில் 3 பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பணி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வெளிநாட்டு பயணிகள் உட்பட சீசன் காலங்களிலும் மற்றும் வார இறுதி நாட்களிலும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இக்காலகட்டங்களில் வாகனச்செறிவு சுமார் 20,000 (PCU) க்கும் மேலாக உள்ளது. கொடைக்கானலுக்கு வரக்கூடிய வத்தலக்குண்டு – கொடைக்கானல் மலைச்சாலையானது 58 கிலோ மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் உடைய மாநில நெடுஞ்சாலை (SH156) ஆகும்.

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் விளையும் பழங்கள், காய்கறிகள் மற்றும் வாசனை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக தினந்தோறும் திண்டுக்கல், மதுரை மற்றும் ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. மேலும் சர்வதேச பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு நட்சத்திர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

கொடைக்கானல் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அவசர மருத்துவ உயர் சிகிச்சைக்காக திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மருத்துவமனைகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காலங்களில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் மழை மற்றும் புயல் காலங்களில் இச்சாலையில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்படுவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இத்தகைய அதிக வாகன செறிவு காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும், நோயாளிகளும் மற்றும் விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இச்சாலையில் 5 இடங்களில் 5 மீட்டருக்கும் குறைவான அகலமுடைய சாலைகளில் ஒருபுறம் செங்குத்தான பாறைகளும் மறுபுறம் ஆழமான பள்ளத்தாக்கும் கூடிய வாகன நெருக்கடியை ஏற்படுத்தும் குறுகிய இடமாக உள்ளது. இவ்விடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் அகலப்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வத்தலக்குண்டு – கொடைக்கானல் சாலையில் பெருமாள்மலையில் இருந்து கொடைக்கானல் நகரம் வரையிலான 11 கிலோ மீட்டர் சாலையினை ஒருவழி வாகன போக்குவரத்தாக மாற்றும் பொருட்டு, கொடைக்கானலில் இருந்து வில்பட்டி -கோவில்பட்டி – டி.வி.எஸ். லே அவுட் -அஞ்சுவீடு -பேத்துப்பாறை வழியாக பெருமாள்மலை – பழனி சாலையில் 2-வது கிலோ மீட்டரில் சேரும் வகையில் (சுமார் 21 கி.மீ) கொடைக்கானலுக்கு ஒரு மாற்றுப்பாதை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சாத்திய கூறுகள், அளவீடுகள் செய்து மற்றும் திட்ட வரைபடங்கள் தயாரிக்க ரூ.29.90 இலட்சம் மதிப்பீட்டில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் 7 கி.மீட்டர் துாரம் கூடுதலாக வந்தாலும் 4 கிராமங்கள் இணைக்கப்பட்டு, அந்த கிராம பகுதி மக்களும் பயனடைவர். இந்த சாலைப்பகுதி முழுவதும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளைச் சார்ந்த பகுதிகள் என்பதால் பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏதும் ஏற்படாது. இப்பணிகள் 2 மாதங்களில் முடிவுற்று இறுதி அறிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, திட்டம் தயார் செய்யப்பட்டு பணிகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒருமுறை அமைக்கப்பட்ட சாலையில் 5 ஆண்டுகள் கழிந்து 6வது ஆண்டில்தான் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் ஆற்றங்கரையோர பகுதி சாலைகள், மலைப்பகுதி சாலைகளில் மண்ணின் தன்மையை பொறுத்து சாலைகள் விரைவில் சேதமடைகின்றன. இதுபோன்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கருத்துருக்கள் கோரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சாலை அமைப்பு பணியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த நெடுஞ்சாலைத்துறை ஆய்வகக்கூடங்களை தரம் உயர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பின்னர் எந்தெந்த பகுதியில், என்னென்ன பொருட்களை பயன்படுத்தி தரமான சாலைகள் அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உலகத்தரம் வாய்ந்த சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு, பதிவேடுகளில் பதிவு செய்து பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது, என மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, சிறப்பு அதிகாரி(தொழில்நுட்பம்-சென்னை) திரு.சுந்தரேசன், தலைமைப்பொறியாளர்(நெடுஞ்சாலை, கட்டுமானம் (ம) பராமரிப்பு- சென்னை) திரு.சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை, கட்டுமானம் (ம) பராமரிப்பு- மதுரை) திரு.ரமேஷ், திண்டுக்கல் கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை, கட்டுமானம் (ம) பராமரிப்பு) திரு.சங்கர், பழனி கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை, கட்டுமானம் (ம) பராமரிப்பு) திரு.குமணன், மதுரை கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு) திரு.பிரசன்ன வெங்கடேசன், கொடைக்கானல் நகராட்சி தலைவர் திரு.பா.செல்லத்துரை, கொடைக்கானல் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவராம், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.