மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெற வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2024

செ.வெ.எண்:-15/2024

நாள்:-11.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெற வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்பு துறையினால் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியா முழுவதும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டு வருகிறது. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளின் விபரங்களை இணையதளத்தில் பதிவுச் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவுச்செய்தவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், மாநிலம் முழுவதும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில் பணிபுரியும் களப்பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த சமூக தரவுகள் கணக்கெடுப்பு பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பில் மாற்றுத்தினாளிகள் முழு விவரம் சரியாக உள்ளவற்றை “ஏ”வகை எனவும், அடையாள அட்டை வைத்திருந்து முழு விவரங்கள் இல்லாதவர்களை “பி” வகை எனவும், இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களை “சி” வகை எனவும் வகைப்படுத்தப்பட்டு கணக்கெடுக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் “சி” வகையில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் 2068 நபர்கள் என கண்டறிப்பட்டனர். இந்த 2068 நபர்களுக்கு மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து மருத்துவர் வழங்கும் மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் (UDID) கார்டு வழங்க வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, 12.11.2024 அன்று குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகம், 14.11.2024 அன்று சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், 15.11.2024 அன்று பழநி வட்டார வளர்ச்சி அலுவலகம், 16.11.2024 அன்று நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 19.11.2024 அன்று திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகம், 20.11.2024 அன்று தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், 21.11.2024 அன்று வேடச்சந்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம், 22.11.2024 அன்று ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், 23.11.2024 அன்று கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலகம், 28.11.2024 அன்று வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் (UDID) கார்டு என்ற தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் நான்கு மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் வட்டார அளவில் நடைபெறும் சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.