மூடு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025
.

செ.வெ.எண்:-52/2025

நாள்:-17.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.04.2025) நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாதாந்திர உதவித்தொகை, பேருந்து பயண அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பயன்பெறலாம். மேலும், பழுதடைந்த வீடுகளை சீரமைக்கவும் மனு அளித்து பயன்பெறலாம்.

மேலும், சிறு தொழில் கடனுதவி, கல்வி உதவித்தொகை கோரி வரும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அறிந்து அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சக மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டங்கள் குறித்து தெரிவித்து அவர்களையும் பயனடையச் செய்ய உதவிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இன்றையக் கூட்டத்தில் 205 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையதினம், பேட்டரி சக்கர நாற்காலி 5 பயனாளிகளுக்கு ரூ.4.99 இலட்சம் மதிப்பீட்டிலும், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 6 பயனாளிகளுக்கு ரூ.6.10 இலட்சம் மதிப்பீட்டிலும், காதொலி கருவி 2 பயனாளிகளுக்கு ரூ.6,400 மதிப்பீட்டிலும் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.11.10 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கவேலு, இளநிலை மறுவாழ்வு அலுவலர் திரு.தாமோதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.