மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
செ.வெ.எண்:-29/2025
நாள்:-12.12.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல்
முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்களை உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான காதொலி கருவி, திறன்பேசி, மடக்கு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான பிரெய்லி கைக்கடிகாரம், பார்வையற்றோருக்கான கருப்பு கண்ணாடி, ஊன்றுகோல், ஒளிரும் மடக்கு குச்சி ஆகிய உதவி உபகரணங்களும், மாதாந்திர உதவித்தொகை மற்றும் தொழில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசின் நலத்திட்டங்கள், சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவி உபகரணங்கள், உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 47,000-த்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்திர உதவித்தொகை மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாதம் மாதம் ரூ,2,000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மேலும், மாதாந்திர உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளி நபர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பயனாளிக்கு கூடுதல் தொகையாக ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 511 மாற்றுத்திறனாளிகள் நபர்கள் மாதந்தோறும் கூடுதல் தொகையாக ரூ.1,000 பராமரிப்பு உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 2,492 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெற்று வந்தனர். மேலும், பார்வையற்ற மாணாக்கர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 72 மாணவர்கள் பயன்பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு நலவாரிய திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் நலவாரிய கல்வி உதவித்தொகையாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,520-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பயனாளிகள் பயன்பெற்றனர்.
மேலும், மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ். கை, கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளியை திருமண புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித்தொகை ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 மாற்றுத்திறனாளி நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச பயணச் சலுகை அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ், 2,364 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டப்படிப்பு படித்த மாற்றுத்திறனாளிக்கு சட்டப்புத்தகம் வாங்கும் திட்டத்தின்கீழ், 2024-2025 மற்றும் 2025-2026 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு மூன்று மாற்றுத்திறனாளிகள் நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் சிறு மற்றும் குறுந்தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ். கடந்த 2021-2025 மற்றும் 2025-2026 ஆகிய ஆண்டுகளில் சுமார் 359 பயனாளிகள் ரூ.35.76 இலட்சம் நிதியுதவி பெற்று பயன்பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் செலுத்த வேண்டிய 5 விழுக்காடு பங்குத்தொகையை அரசே வழங்கும் திட்டத்தின் கீழ், 25 பயனாளிகள் ரூ.1.70 இலட்சம் மதிப்பிலும், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 11 பயனாளிகள் ரூ.6.00 இலட்சம் மதிப்பிலும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பாரத பிரதமரின் வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 6 பயனாளிகள் ரூ.70,000 மதிப்பிலும் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த 2021-2025 நிதியாண்டுகளில் ஆரம்ப கால பயிற்சி மையங்களில் பயிலும் 40 மாற்றுத்திறனாளி குழந்தைகள் ரூ,34.80 இலட்சம் மதிப்பிலும், மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கான ஊதியம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 27 சிறப்பு ஆசிரியர்கள் ரூ.2.42 கோடி மதிப்பிலும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் செயல்படுத்தப்பட்டு 50 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக ரூ.53.60 இலட்சம் மதிப்பிலும் பயன்பெற்று வருகின்றனர்.
இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயனடைந்த திண்டுக்கல் மேற்கு வட்டம், கள்ளிப்பட்டியைச் சேர்ந்த திரு.துறைபாண்டி என்பவர் தெரிவித்ததாவது:-
என் பெயர் துறைபாண்டி, நான் கள்ளிபட்டியில் வசித்து வருகின்றேன். நான் ஒரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் பிறருடைய உதவியின்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வர சிரமமாக இருந்தது. என்னுடைய அத்தியாவசிய தேவைகளை கூட என்னால் செய்துகொள்ள இயலவில்லை. நான் இப்படி இருப்பதால் என்னால் என் குடும்ப உறுப்பினர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.
நான் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு தேவையான உதவிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் உதவி செய்தனர்.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் மூலம் எனக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இப்போது, என்னால் பல்வேறு இடங்களுக்கு சென்று வர வசதியாக உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குகின்ற வகையில், அவர்கள் வாழ்க்கைத்தரம் மேம்படுகின்ற வகையில், எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதுபோன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்று பயனடைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேரந்த திரு.மைக்கேல் ராஜ்குமார் என்பவர் தெரிவித்ததாவது:-
என் பெயர் மைக்கேல் ராஜ்குமார், நான் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் எனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கோ, குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி தருவதற்கோ முடியவில்லை. மேலும், எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற இயலவில்லை. இதனால் என்னுடன் சேர்ந்து என் மனைவி மற்றும் குழந்தைகளும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தேன்.
என்னுடைய மனுவினை ஏற்றுக்கொண்டு எனக்கு தமிழ்நாடு அரசின் மூலம் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இப்போது என்னால் என்னுடைய தேவைகளுக்காக வெளியில் சென்று வருவதற்கு எளிமையாக உள்ளது. என்னுடைய குழந்தைகளை தினந்தோறும் பள்ளிக்கு தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரில் அழைத்து செல்கின்றேன். இதனால் என் மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அரசின் நலத்திட்ட உதவிகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி, அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் மற்றும் அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதுகாத்து, வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்குகின்ற வகையில், அவர்கள் வாழ்க்கைத்தரம் மேம்படுகின்ற வகையில், எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதுபோன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி, அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் மற்றும் அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதுகாத்து, வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.