மூடு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் விருகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2024

செ.வெ.எண்:-58/2024

நாள்:-24.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் விருகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைப்புரிந்து வரும் சிறப்பு ஆசிரியர்கள், சிறந்த சமூகப் பணியாளர், சிறந்த தொண்டு நிறுவனம், ஓட்டுநர், மாற்றுத்திறநாளிகளுக்கு தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் சிறுவனங்கள் ஆகியவற்றிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு என மொத்தம் 22 விருதுகள் 03.12.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு விருதுக்கும் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. அதன்படி,

 சிறந்த பணியாளர் / சுயதொழில் புரிபவர்:- 1.கை, கால் பாதிக்கப்பட்டடார் அல்லது தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் (LC), 2.பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், 3. செவித் திறன் பாதிக்கப்பட்டோர், 4.அறிவுசார் குறைபாடுடையோர், 5.பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, 6.Developmental Disorder (புறவுலக சிந்தனையற்றோர்(ASD), குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு(SLD), 7. மன நோய், 8. இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு, இரத்த அழிவுச்சோகை, அரிவாளனு இரத்தச் சோகை, 9. நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு திசு பன்முகக் கடினமாதல், நடுக்கு வாதம், 10.பல்வகை குறைவாடு ஆகிய பிரிவுகளில் 10 விருதுகள் வழங்கப்படவுள்ளது.

 ஹெலன் கெல்லர் விருது:- மொத்தம் 2 விருதுகள். (பார்வைத் திறன் மற்றும் செவித் திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு – தலா ஒரு விருது)

 சிறந்த ஆசிரியர்:- (அறிவுசார் குறைவாடுடையோருக்கு கற்பித்தல்) -1 விருது.

 சிறந்த சமூகப் பணியாளர்:- 1 விருது.

 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம்:- 1 விருது.

 மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம்:- 1 விருது

 ஹெலன் கெல்லர் விருது:- ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித் திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் – 1 விருது

 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் (அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) – 1 விருது

 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் -2 விருதுகள்.

 பொதுக்கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் -2 விருதுகள்.

விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் 28.10.2024 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 28.10.2024 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.