மூடு

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு – நத்தம்.

வெளியிடப்பட்ட தேதி : 18/02/2026

செ.வெ.எண்: 53/2026

நாள்: 17.02.2026

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், லிங்கவாடி ஊராட்சிக்குட்பட்ட எல்.மலையூர் கிராமத்தில், ஒதுக்கப்பட்ட வருவாய்க் கூட்டமைப்பின் திட்டப்பகுதி (SCPAR) நிதி திட்டம் (2024-2025) மற்றும் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டம் (2025-2026)-ன் கீழ்இ ரூ.9.95 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ நிளத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்துஇ சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தபோது 60 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், லிங்கவாடி ஊராட்சிக்குட்பட்ட எல்.மலையூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலையரங்கம் கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் எந்த அளவீட்டில் சிமெண்ட் மற்றும் மணல் சேர்க்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, எல்.மலையூர் கிராமத்தில் உள்ள கண்மாயை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கண்மாய்க்கு வரத்துகால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே, பொதுமக்களின் கோரிக்கையினை நிவர்த்தி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வரத்துகால்வாய் அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

. . .

மேலும், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், லிங்கவாடி ஊராட்சிக்குட்பட்ட எல்.மலையூர் கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் (2024-2025)-க்கீழ், ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் கனவு இல்லம் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயனாளியிடம் வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தினந்தோறும் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், லிங்கவாடி ஊராட்சிக்குட்பட்ட எல்.மலையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்கன்வாடிக்கு வருகைபுரியும் குழந்தைகளின் வருகை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை குறித்த பதிவேட்டினை சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், லிங்கவாடி ஊராட்சிக்குட்பட்ட எல்.மலையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பள்ளி கட்டடத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ள நிலையில் இருப்பதால் உடனடியாக மேற்கூரையினை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (வட்டார ஊராட்சி) அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் நத்தம் பேரூராட்சி கூடுதல் அலுவலகக் கட்டடப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஒப்பந்ததாரர்களிடம் கட்டுமானப் பணியினை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, நத்தம் பேரூராட்சியில் உள்ள காவல் நிலையத்தை ஆய்வு செய்து பார்வையிட்டார். காவல் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பது குறித்தும், காவல் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நத்தம் ஊராட்சி ஒன்றியம், லிங்கவாடி ஊராட்சிக்குட்பட்ட எல்.மலையூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்தபோது, அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) திரு.ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திரு.ரவீந்தரன், நத்தம் வட்டாட்சியர் திரு.பாண்டியராஜன், நத்தம் பேரூராட்சி தலைவர் திரு.சேக் சிக்கந்தர் பாட்ஷா அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.