மூடு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ.8.10 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025
.

செ.வெ.எண்:-62/2025

நாள்:-24.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ.8.10 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.03.2025) நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 227 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையக் கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் உயர் கல்வி மருத்துவப் படிப்பு பயில கல்வி உதவித்தொகை ஒரு மாணவருக்கு ரூ.50,000, திருமண உதவித்தொகை 10 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000, விபத்து மரண உதவித்தொகை ஒரு பயனாளிக்கு ரூ.2.05 இலட்சம், இயற்கை மரண உதவித்தொகை 6 பயனாளிகளுக்கு தலா ரூ.55,000 மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.25,000 என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.8.10 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் மருத்துவப் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கான ஆணையை பெற்ற திண்டுக்கல் மாவட்டம், வெள்ளையம்பட்டியைச் சேர்ந்த திரு.இராமன் – திருமதி காளியம்மாள் தம்பதியரின் மகன் அபிமன்யூ தெரிவித்ததாவது:-

எனது தந்தையும், தாயும் கட்டடத் தொழிலாளிகள். அவர்கள் தினமும் கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவையும் கவனித்துக்கொண்டு, என்னையும் படிக்க வைத்தனர். நான் பிளஸ்2 தேர்ச்சி பெற்று, நீட் தேர்வில் வெற்றி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனது படிப்புச் செலவை சமாளிக்க எனது பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அப்போதுதான், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதை அறிந்தோம். மேலும் மருத்துக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழக்கப்படுவதை அறிந்தோம்.

எனது தாய் திருமதி காளியம்மாள் 20 ஆண்டுகளாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக உள்ளார். இதையடுத்து முறையான ஆவணங்களுடன் திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். எனக்கு முதலாமாண்டுக்கு ரூ.50,000 கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார். இந்த தொகை எனது படிப்புக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

என்னைப் போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயிலுவதை உறுதிப்படுத்திடும் வகையில் இதுபோன்ற கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, உதவி ஆணையாளர்(கலால்) திரு.ஆர்.பால்பாண்டி, தொழிலாளர் உதவி ஆணையாளர் திரு.ஆர்.ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.மொ.கு.அன்பழகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கவேலு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.