மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
செ.வெ.எண்:-28/2023
நாள்:10.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கிய களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.10.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
புத்தக முதல் விற்பனையை சென்னை கடல்சார் வாரியம் துணைத்தலைவர் முனைவர் மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாண்பமை நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் பேசியதாவது:-
இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட நீதிபதிகள் பலர் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களில் கலந்துகொள்கின்றனர். இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இந்த புத்தகத் திருவிழாக்கள் நமது மாநிலத்தின் சிறப்புகளின் ஒன்றாக மாறியிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகங்களுடன் கூடி மகிழ்வது சிறப்பான விசயம். மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், சிந்தனை திறனையும், பேச்சாற்றலையும் வளர்த்துக்கொள்ள இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறது.
பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அளவை வெளியிடுவார்கள். எந்தவொரு புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை டாஸ்மாக் மது விற்பனையைவிட அதிகமாக நடக்கிறதோ, அன்று தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் கண்டிப்பாக ஏற்படும்.
வழக்கறிஞர்கள் மதம், இன ரீதியான வேறுபாடுகள் இன்றி மக்களுக்காக பணியாற்றிட வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துவேன். நாகரீகத்தின் வெளிப்பாடு என்னவென்றால் மக்கள் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும், அறிவு வளர்ந்துகொண்டே போக வேண்டும். புத்தகங்கள் படிப்பதால் தேவையில்லாத விசயங்கள் நடப்பது தவிர்க்கப்படும்.
குழந்தைகள், முதியோர்கள், ஆங்கிலம், வரலாறு, இலக்கியம் தொடர்பான ஏராளமான புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதன் மூலம் ஏராளமான எழுத்தாளர்களையும், படைப்பாளிகளையும் உருவாக்க முடியும். அவர்கள் தொடர்ந்து படைப்புகளை எழுதிட உதவும்.
தனிமனிதனை பண்படுத்துவதிலும், சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் புத்தகங்களில் பங்கு மிக முக்கியமானது. மனித சமூக்தின் அறிவு வளர்ச்சிக்கு கருவிகளாக புத்தகங்கள் உள்ளன. பலரது வாழ்வில் ஏதேனும் ஒரு புத்தகம் மாற்றத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கும். மனித சமூகத்தின் பல்வேறு வளர்ச்சிகளை நமக்கு தருவது நுால்கள்தான். புத்தகங்களுக்கும், வாசகர்களுக்குமான உறவு தமிழ் சமூகத்திடம் தொடர்ந்து பலம் பெற்று வருவதை தமிழில் வெளியாகும் புத்தகங்கள் வாயிலாகவும், புத்தகக் கண்காட்சிகளில் கிடைக்கும் வரவேற்பு மூலமாகவும் நம்மால் உணர முடியும்.
புத்தகங்கள் படிக்கும்போது நமது எண்ணங்களும் தெளிந்த நீரோடையாகும். நமது எண்ணங்கள் குழப்பம் அடைகின்றபோது நமது செயல்களில் தெளிவு கிடைக்காது. துாய்மையான எண்ணங்கள் வேண்டுமென்றால் நல்ல புத்தகங்களை நாம் படிக்க வேண்டும்.
எனது தந்தை புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார். எங்கள் குழந்தைகள் நல்லவர்களாக வளர வேண்டும் என்றால் புத்தகங்கள் வாங்கிக்கொடுங்கள். புத்தகங்களை படிப்பதன் மூலம் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேரலாம். வாரத்திற்கு ஒருநாள் டிஜிட்டல் பயன்பாட்டை தவிர்த்து, குடும்பத்தினருடன் அமர்ந்து பேச வேண்டும். ஆர்வம் உள்ளவர்கள் உறுப்பினர்களை இணைத்து சிறிய நுாலகம் நடத்தலாம். அதில் புத்தகங்கள் படிப்பவர்களிடம் அந்த புத்தகங்களை பற்றி குறிப்புரை கேட்டு பெற்று, குழந்தைகளிடம் ஆர்வத்தை ஊக்கப்படுத்திட வேண்டும்.
முன்பெல்லாம் நல்ல புத்தகங்களை வாங்க வேண்டும் என்றால் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். இன்றைய காலத்தில் இ-புத்தகங்கள், வலைதளங்கள் வளர்ந்து வரும் நேரத்தில் யாரும் புத்தகங்களை வாங்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அதை இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் பொய்பித்துள்ளன. அந்த அளவிற்கு புத்தக விற்பனை அதிகரித்துள்ளது.
கற்க கற்க ஒருவனுக்கு தான் கற்றவற்றை விட கல்லாதது மிக அதிகம் என்பது புரியத் தொடங்கும். மனிதனை அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்வது புத்தகங்கள்தான். மனிதனை புனிதனாக்கி பண்படுத்துகிறது.
டாக்டர் அம்பேத்கர் சிறந்த சட்ட மேதையாக விளங்குவதற்கு புத்தக படிப்புதான் உறுதுணையாக இருந்துள்ளது. அவருடைய வீட்டில் 60,000 புத்தகங்கள் இருந்துள்ளன. உலகில் மாமேதைகள் பெரும்பாலும் புத்தகம் படித்து உயர்ந்தவர்கள்தான்.
நல்ல நுால்களை வாசிப்பதன் மூலம் வாழ்வில் உயரலாம். வாசிப்பு என்பது நினைவாற்றலை அதிகரிக்கும். புதிய சொற்களை கற்றுக்கொள்ளும் திறன் வளர்கிறது. மொழித்திறன் மேம்படும். சிக்கலை தீர்க்கும் திறனை வளர்க்கலாம். உலகத்தை பற்றிய விரிவான புரிதல் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடுவதற்கு தகுதி கிடைக்கும். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மன நிறைவு கிடைக்கும்.
புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்களின் அறிவுத்திறன் வளர்கிறது. எழுத்தாளர்களின் திறனும் வளர்கிறது. புத்தகங்களை படிப்பதன் மூலம் மாணவர்கள், ஒரு மனிதனுடைய நல்ல எண்ணங்கள் செயல்திறன் பெறுகிறது. அதுமட்டுமின்றி நற்சிந்தனைகள் உருவாகிறது.
தமிழ்நாட்டின் கலர் மாறி வருகிறது. தமிழ்நாட்டில் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவது இந்திய அளவில் பேசப்படும் விசயமாக உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியாளர்கள் சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். மாவட்டம்தோறும் புத்தகக் கண்காட்சி நடப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல், ஜாதி, மத உணர்வுகளை கடந்து தமிழர்களாக அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்தி வருவது மிகுந்த மகிழ்ச்சியான விசயம். இதுபோன்ற நல்ல பணிகள் தொடர வேண்டும். அதற்கு புரவலர்கள் ஆக்கமும், ஊக்கமும் அளிக்க வேண்டும்.
பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அதை படிக்க வைக்க வேண்டும். புத்தகங்களை படிப்பதால் சைபர் கிரைம் குறையும். நீதிபதியாக நான் பார்க்கையில், புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லாததால் பலர் கவனம் திசைமாறி, பழக்க வழக்கங்கள் மாறி, தவறான நடத்தலுக்கு செல்ல துாண்டுகிறது.
புத்தகத் திருவிழாக்கள், இலக்கியத் திருவிழாக்கள் என மக்களை அறிவுப்பூர்வமான வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திட வேண்டும். நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் புத்தகத் திருவிழாக்களை நடத்திட வேண்டும்.
மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க ஆட்சியாளர்களாக. நுால்கள் படியுங்கள் உலகம் உங்களைத் தேடி வரும். இந்த மாதிரியான புத்தகத் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற வேண்டும். இதுபோன்ற புத்தக திருவிழாக்களை நடத்தி வரும் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் நான் வாழ்த்துகிறேன், என மாண்பமை நீதியரசர் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக, வாசிக்கும் சமூகமாக மாற்றிட தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துகிறது. திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களத்துடன் இணைந்து நடத்துகிறது.
குறிப்பாக கல்வித்துறையில் பெருமளவு சுவனத்தைக் குவித்துள்ளது இல்லம் தேடி கல்வி என்னும் இயக்கத்தின் மூலம் நமது மாவட்டத்தில் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட தன்னவர்களை ஈடுபடுத்தி, மாணவர்கள் வாசிக்கவும், எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவ மாணவியரிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் புத்தகத் திருவிழாக்கள், அறிவுத்திருவிழாக திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் உண்டியல் மூலம் சிறுக சிறுக பணம் சேமித்து புத்தகங்கள் வாங்குவது முதலில் சேமிப்பு பழக்கத்தையும், பின்னர் வாசிப்புப் பழக்கத்தையும் வளர்க்கிறது.
இந்தக் கண்காட்சியில் புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு 15 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தகங்கள் அறிவின் திறவுகோல் அவற்றை வாசிப்பது ஒருவடைய சிந்தைனையை செம்மைப்படுத்தி அறிவுத்தெளிவுடன் வாழக்கையை அணுக உதவும்.
இளையத் தலைமுறையினரிடையே செல்லிடைப்பேசி மற்றும் இணையப் பயன்பாட்டால் குறைந்துள்ள புத்தக வாசிப்பை அதிகரிக்க முன்னெடுத்துள்ள இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் புத்தக வாசிப்பை அதிகரிக்கும் விதையாக அமையும்.
திண்டுக்கல் புத்தகத் திருவிழானை பார்வையிடுவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலையில், மாலையின் பல்வேறு நிகழ்சிகள் நடத்தப்படவுள்ளன. இதனை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
சென்னை கடல்சார் வாரியம் துணைத்தலைவர் முனைவர் மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-
சிறந்த அறிஞர்கள், பேச்சாளர்கள் அனைவரும் புத்தகம் வாசிப்பதனால் தான் சிறந்த இடத்தை பிடித்து வளர்ந்துள்ளனர். புத்தகக் கண்காட்சிக்கு உறுதுணையாக திண்டுக்கல் இலக்கியக் களம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் இலக்கியக் களம் நான் ஏற்றி வைத்த விளக்கு. இதை ஊக்கப்படுத்துவதற்காக நான் ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறேன்.
நாம் பெற்ற அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியறிவு, பட்டங்கள் பெறுவது அடிப்படை நிலைதான். அஸ்திவாரம்தான். அதன் மீது கட்டடம் வர வேண்டும் என்றால் புத்தகங்கள் படிக்க வேண்டும். இந்த புத்தக கண்காட்சியில் 126 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழா மூலம் மக்களை நெருங்க முடியும். அதன்மூலம் சிறந்த ஆட்சியை வழங்க முடியும். புத்தகத்தை படிக்கும்போது சமூக வளர்ச்சி ஏற்படும்.
உலகின் மிச்சிறந்த அறிஞர்கள் அனைவரின் உயர்வுக்கும் புத்தகங்கள்தான் அடிப்படையாக இருந்துள்ளன. எல்லோர் வீட்டிலும் சிறிய நுாலகம் இருக்க வேண்டும். நாம் புத்தகங்களை நேசிக்க வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகங்கள் குறித்து விளக்கி, அதை படிக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் மேம்பாடு அடைய பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும், என முனைவர் மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.
புத்தகத் திருவிழாவில், 11.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட எழுத்தாளர்கள் சந்திப்பு மற்றும் நுால் வெளியீடு, இரவு 7.00 மணிக்கு பிரளயன் வழங்கும் சென்னைக் கலைக்குழுவினரின் நாடகச் சிதறல்கள், 12.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு மாணவர்கள் பங்கேற்கும் ”வாங்கினேன்… வாசித்தேன்… சொல்கிறேன்…“ நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் உதவி முதன்மை இயக்குநர் முனைவர் சத்யா வேல்முருகன் அவர்கள் மற்றும் ரோட்டரி மாவட்ட ஆளுநர்(மாவட்டம் 3000) முனைவர் ஆர்.ராஜா கோவிந்தசாமி அவர்கள் ஆகியோரின் வரப்புயர என்ற தலைப்பில் சிந்தனையுரை, 13.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் ”வாங்கினேன்… வாசித்தேன்… சொல்கிறேன்…“ நிகழ்ச்சியும், இரவு 7.00 மணிக்கு தமிழ்நாடு நியூஸ் 18 தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் திரு.ச.கார்த்திகைச்செல்வன் அவர்கள் “ஊடக – அவசர உலகின் அவசியத் தேவை“ என்ற தலைப்பில் சிந்தனையுரை, 14.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு திண்டுக்கல் மாநகர் மற்றும் திண்டுக்கல் ஒன்றிய “பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கதை சொல்லல் போட்டி, இரவு 7.00 மணிக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் பொதுச்செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் “மானுடம் தடைக்க…“ என்ற தலைப்பில் சிந்தனையுரை, 15.10.2024 அன்று காலை 10.30 அணிக்கு அறிவியல் கருத்தரங்கம், இரவு 7.00 மணிக்கு எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் “தீங்கின்றி நாடெல்லாம்…“ என்ற தலைப்பில் சிந்தனையுரை, 16.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு மகளிர் சிறப்புக் கருத்தரங்கம், இரவு 7.00 மணிக்கு வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி அவர்கள் “பெண்கள் – சட்டமும் சமூகமும்“ என்ற தலைப்பில் சிந்தனையுரை, 17.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு இந்தியா வாசிக்கிறது என்ற நிகழ்ச்சி, இரவு 7.00 மணிக்கு எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் அவர்கள் “கடைசியாள் என்ன வாசித்தீர்கள்?“ என்ற தலைப்பில் சிந்தனையுரை, 18.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி முகமை வழங்கும் சுகாதார வினாடி வினா நிகழ்ச்சி, இரவு 7.00 மணிக்கு மல்லைத் தமிழ்ச்சங்கம் மற்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்(ஆசியா) தலைவர் சமூக ஆர்வலர் திரு.மல்லை சி.ஏ.சத்யா அவர்கள் “தமிழரின் அறச்சீற்றம்“ என்ற தலைப்பில் சிந்தனையுரை, 19.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு குறும்படங்கள் திரையிடல், இரவு 7.00 மணிக்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.சசிகாந்த் செந்தில் இ.ஆ.ப., (விருப்ப ஓய்வு) அவர்கள் “தேச நலனில் இளைஞர்கள்“ என்ற தலைப்பில் சிந்தனையுரை, 20.10.2024 அன்று காலை 10.30 மணிக்கு பாராட்டும்… பரிசளிப்பும்… நிகழ்ச்சியில் காவல் துறைத் தலைவர் (ஓய்வு) முனைவர் எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் திரு.க.அருண்மணி அவர்கள் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கி சிறப்புரையாற்ற உள்ளனர்.
புத்தகத் திருவிழாவில் 20.10.2024 அன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் விழா நிறைவுப் பேருரை, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் விழா சிறப்புரை ஆற்றவுள்ளனர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
புத்தகத் திருவிழாவில் தினமும் மாலை 3.00 மணிக்கு உலகத் திரைப்படம் நிகழ்ச்சி, மாலை 5.00 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி பி.உஷா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சா.சதீஷ்பாபு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.ரவிச்சந்திரன், மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சரவணக்குமார், திண்டுக்கல் இலக்கியக் களம் தலைவர் முனைவர் ரெ.மனோகரன், செயலாளர் எழுத்தாளர் திரு.ச.இராமமூர்த்தி, நிர்வாக செயலாளர் திரு.கண்ணன், பொருளாளர் திரு.மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.