மூடு

முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் – 2-ற்கு நிர்வாகிகள் பதவிகளுக்கு இசுலாமிய சமுதாயத்தினைச் சார்ந்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2024

செ.வெ.எண்:-20/2024

நாள்:-08.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் – 2-ற்கு நிர்வாகிகள் பதவிகளுக்கு இசுலாமிய சமுதாயத்தினைச் சார்ந்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் சிறுபான்மையின சமுதாயத்தினைச் சார்ந்த பின் தங்கிய நிலையிலுள்ள முஸ்லீம் மகளிர்களுக்கு உதவும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்–2 என ஆரம்பிக்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இச்சங்கத்திற்கு விதைத்தொகையாக ரூ.1,00,000 அரசால் அனுமதித்தும், இச்சங்கம் திரட்டும் நிதி ஆதாரத்திற்கேற்ப அரசின் உகந்த தொகையாக இணைத்தொகையினை (Matching Grant) 1:2 என்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இருபருவங்களையும் சேர்த்து பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமிய மகளிர்கள் பயனடையும் வகையில் அதிகபட்சமாக ரூ.20,00,000 வரை மானியத்தொகை வழங்கவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், இச்சங்கம் தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டம் – 1975-ன் கீழ் செயல்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்–2 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சங்கத்தின் பதவி வழித்தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பொருளாளராகவும், இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் பதவி வழி உபதலைவராகவும் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.

புதிதாக தொடங்கப்பட உள்ள முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் – 2-ற்கு கௌரவ செயலாளர், இணை கௌரவ செயலாளர் – 2 நபர்கள், செயற்குழு உறுப்பினர் – 3 நபர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளதால் திண்டுக்கல் மாவட்ட இசுலாமிய சமுதாயத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருபாலரும் தங்களது சுய விவரத்துடன் சமுதாய மக்களுக்கு தங்களால் மேற்கொண்ட சேவைகளுடன் ஆதார் இனச்சான்று, குடும்ப அட்டையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.