மேம்பாட்டுப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு (ஆத்தூர்)
செ.வெ.எண்: 68/2026
நாள்: 23.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடம் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், சமுதாயக் கூடம் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ரூ.1.53 இலட்சம் மதிப்பீட்டில் பெரியார் காலனி பகுதியில் மிகப்பெரிய அளவிலான மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, மரக்கன்றுகளின் பெயர் வகைகள் குறித்தும், மரக்கன்றுகளின் ஆயுட்காலம் குறித்தும், இந்த மிகப்பெரிய அளவிலான மரக்கன்றுகளை நடவு செய்யும்போது எந்த அளவிற்கு இடைவெளி விட்டு நடவு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் மரக்கன்றுகளை பராமரத்து வரும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், என்.பஞ்சம்பட்டி ஊராட்சியில் உள்ள நர்சரியில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, நர்சரியில் பராமரிக்கப்படும் மரக்கன்றுகளுக்கு எந்த அளவீட்டில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும், மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மண் வகைகள், உர வகைகள் குறித்து நர்சரியில் பணியாற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முருகன், திருமதி.பத்மாவதி, உதவி பொறியாளர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
