மூடு

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு மாநில வாணிப கழகம்/ திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 14/12/2024
.

செ.வெ.எண்:-36/2024

நாள்: 12.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு மாநில வாணிப கழகம்/ திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மாநில வாணிப கழகம்/ திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் இன்று(12.12.2024) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மழையளவு, அணைகளில் நீர் வரத்து நிலவரங்கள், மழைக்காலங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள், அங்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்தும், மீட்புக் குழுவினர் மற்றும் அவர்களிடம் உள்ள மீட்பு பணிக்கான உபகரணங்கள் போன்ற விபரங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பற்ற பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள அரசு கட்டடங்கள், சீரமைப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் / திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 12.12.2024 மற்றும் 13.12.2024 ஆகிய தேதிகளில் கனமழை மற்றும் மிககனமழை பெய்ய உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் எச்சரிக்கை வரப்பெற்றுள்ளது.

திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம், திண்டுக்கல் பொதுப்பணித்துறை அலுவலகம், சத்திரப்பட்டி சார் பதிவாளர் அலுவலகம், நிலக்கோட்டை, நத்தம், பழனி, வேடசந்துார் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்கள், வேடசந்துார் புகையிலை ஆராய்ச்சி மையம், கொடைக்கானலில் அப்சர்வேட்டரி மற்றும் போட்கிளப் ஆகிய இடங்களில் மாலைமானி நிலையங்கள் உள்ளன.

திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 5, திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 5, நத்தம் வட்டத்தில் 6, நிலக்கோட்டை வட்டத்தில் 4, ஆத்துார் வட்டத்தில் 4, பழனி வட்டத்தில் 8, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 9, வேடசந்துார் வட்டத்தில் 4, குஜிலியம்பாறை வட்டத்தில் 3, கொடைக்கானல் வட்டத்தில் 4 மற்றும் நத்தம் அழகர்மலை, பாலாறுபொருந்தலாறு அணை, கொடைக்கானல் பேரிஜம் ஏரி ஆகிய இடங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 57 இடங்களில் புதியதாக தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆத்துார், திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, நத்தம், ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்துார் ஆகிய 6 இடங்களில் சென்சார் பொருத்தப்பட்ட தானியங்கி வானிலை நிலையங்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, மேற்படி இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கண்காணிக்க மற்றும் ஒருங்கிணைக்க அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான குழுக்கள் கனமழை, புயல், வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் மாவட்டத்தில் ஏற்படும் சேதங்களை சரிசெய்யவும், பாதிப்புகளால் இன்னலுறும் பொதுமக்களை மீட்டு தேவையான வசதிகள் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்காக 66 பள்ளிகள், 4 திருமண மண்டபங்கள், 5 சமுதாயக் கூடங்கள் என மொத்தம் 75 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் அதை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிப்பதற்காக 559 முதல் தகவல் அளிப்பவர்கள் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், மழை காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் (Contingency Plan) தயாரித்து வைத்திருக்க வேண்டும். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்த தேவையான வயர்லெஸ் கருவிகளை தயார் நிலையில் வைத்து, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பல்வேறு துறைகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் வட்டார வாரியாக மீட்புக் குழுக்கள் (deployment plan for rescue teams) அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் (Marooned areas) மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக போக்குவரத்து திட்டம் (Traffic Plan) மற்றும் மீட்புக் குழுவிற்கான பசுமை தாழ்வாரங்கள்(Green Corridor) ஏற்படுத்திட வேண்டும்.

தீயணைப்புத் துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின்போது சீரிய முறையில் செயல்பட அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள், பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் தெரிந்தவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தேவையான பயிற்சி அளித்திட வேண்டும். மீட்புப் பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவைப் படகுகள் (Life buoys life jackets) மற்றும் ‘ரப்பர் டிங்கிகள்“ ஆகியவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க (outbreak of any epidemic in case of flood situation) முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக் குழு (Mobile Medical teams) ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து அணைகளின் மதகுகள் திறந்து மூடும் நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அணைக்கட்டு பகுதியில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தி 24 மணி நேரமும் நீர்வரத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும். அணைக்கட்டு கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி வசதி, கம்பியில்லாச் செய்தி வசதி செய்யப்பட வேண்டும். அணையில் இருந்து உபரிநீரை வெளியேற்றும்போது, வழியோரக் கிராமங்களில் தகுந்த முன்னறிவிப்பு செய்து, தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆறுகள், குளங்கள், நீர் செல்லும் கால்வாய் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைப்பதற்கு போதுமான சவுக்கு கட்டைகள் மற்றும் மணல் மூட்டைகளை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படகுகள், கட்டுமரம் மற்றும் படகு இயக்குபவர்கள், நீச்சல் வீரர்கள் ஆகியோர்களை அவசர காலத்தில் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை துார்வாரிட வேண்டும். கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலும், சிறு பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாதவாறு சுத்தம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள், கட்டடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்து அவற்றின் கட்டட உறுதித்தன்மை, மின் வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை உறுதி செய்திட வேண்டும். அவர்களுக்கு உணவு வசதிகள் செய்வதற்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடிமைப்பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திட வேண்டும்.

சாலைகளில் சிறுபாலங்கள் மற்றும் பெரிய பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாமல் கண்காணித்திட வேண்டும். கிராம ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள், சிறு பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாதவாறு சுத்தம் செய்திட வேண்டும். மலைப்பாதைகளில் மண் சரிவு, மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுவதால் வாகனப் போக்குவரத்து தடை ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியவற்றின் அலுவலர்களைக் கொண்ட மீட்புக்குழு அமைத்து போக்குவரத்தை உடனுக்குடன் சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேதமடையும் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை உடனடியாக மாற்றுவதற்கு தேவையான உபகரணங்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க தேவையான மருந்துகள் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திட வேண்டும்.

அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள், அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த, துறையின் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் TN ALERT Mobile app-ஐ அவர்களது செல்லிடைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அனைத்து துறையினரும் வடகிழக்கு பருவமழை காலத்தில், கனமழை, வெள்ளம், புயல் ஏற்படின் அதனை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னேற்பாடுகளுடன் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதிக மழை பொழிவு ஏற்பட்டாலும். வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் / திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், பழனி சார் ஆட்சியர் திரு.கிஷன்குமார், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.என்.ரவிச்சந்திரன், இணை இயக்குநர்(சுகாதார பணிகள்) மரு.பூமிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரிசுவி, வருவாய் வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், பொதுப்பணித்துறையினர், ஊரக வளர்ச்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.