வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்: 34/2024
நாள்: 15.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025-ஐ முன்னிட்டு தேர்தல் தொடர்புடைய அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் தேர்தல் பார்வையாளர்/தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியம் முதன்மை நிர்வாக அலுவலர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று(15.11.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்க திருத்தம் 2025-ஐ முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு(7) சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2025-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் 29.10.2024 முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர்(31.12.2006-ஆம் தேதி வரை பிறந்தவர்கள்) சேர்ப்பதற்கு படிவம் – 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம்-7, பிழைத்திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெற படிவம் – 8, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை சேர்க்க படிவம் 6பி ஆகிய படிவங்களில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் 16.11.2024(சனிக்கிழமை), 17.11.2024(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23.11.2024(சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. வாக்காளர்கள் விண்ணப்பத்தினை தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் வழங்கி பயன்பெறலாம்.
இந்த சிறப்பு முகாம்களை சிறந்த முறையில் நடத்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் பணிகளை செம்மையாக மேற்கொள்ள அனைத்து அலுவலர்களும் சிறப்பாக செயலாற்றிட வேண்டும், என தேர்தல் பார்வையாளர் டாக்டர் பி.மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பழனி சார் ஆட்சியர் திரு.எஸ்.கிஷன்குமார், இ.ஆ.ப., வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் திண்டுக்கல் திரு.இரா.சக்திவேல், கொடைக்கானல் திரு.பி.சிவராம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.