மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 25/08/2025
.

செ.வெ.எண்:90/2025

நாள்: 22.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(22.08.2025) நடைபெற்றது.

இன்றையக் கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு வட்டம், கூவனூத்து ஊராட்சி நொச்சியோடைப்பட்டி ஊராட்சி, கோட்டை புதூரில் சாலை மற்றும் லைப் சென்டர் முதல் சிறுமலை அடிவாரம் வரை சாலையை சீரமைக்கவும், எம்.பஞ்சம்பட்டி கிராமத்திற்கு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் உழுவதற்கு 5 கலப்பை, கொக்கி கலப்பைகள் வழங்கவும், வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் டிராக்டர் வாடகை நிர்ணையத்தொகை ரூ.500-ஆக குறைக்கவும், விருவீடு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவும், மின்சார துறையின் சார்பில் பவர்கிரிட் அமைப்பதற்கு நிலம் பெறப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் 60 மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவதற்காகவும், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண்பதற்காகவும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 112 மனுக்கள் பெறப்பட்டதில் 64 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 19.08.2025 காலை 6.00 மணி நிலவரப்படி, பாலாறு பொருந்தலாறு அணை (மொத்த உயரம் 65 அடி) நீர்மட்டம் 23.59 அடி, பரப்பலாறு அணை (மொத்த உயரம் 90 அடி) நீர்மட்டம் 69.93 அடி, வரதமாநதி அணை (மொத்த உயரம் 66.47 அடி) நீர்மட்டம் 61.62 அடி, குதிரையாறு அணை (மொத்த உயரம் 79.99 அடி) நீர்மட்டம் 44.90 அடி, குடகனாறு அணை (மொத்த உயரம் 27.07 அடி) நீர்மட்டம் 19.36 அடி, நங்காஞ்சியாறு அணை (மொத்த உயரம் 39.37 அடி) நீர்மட்டம் 25.79 அடி என்ற அளவில் நீர்மட்டம் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 01.04.2025 முதல் 18.08.2025 வரை யூரியா உரம் விநியோகம் 2725 மெ.டன், இருப்பு 2528 மெ.டன், டிஏபி விநியோகம் 1078 மெ.டன், இருப்பு 1836 மெ.டன், பொட்டாஷ் விநியோகம் 1125 மெ.டன், இருப்பு 1062 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் விநியோகம் 488 மெ.டன், இருப்பு 951 மெ.டன், காம்ப்ளக்ஸ் விநியோகம் 984 மெ.டன், இருப்பு 5555 மெ.டன், அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் குளோரைடு விநியோகம் 137 மெ.டன், இருப்பு 100 மெ.டன், கலப்பு உரங்கள் விநியோகம் 294 மெ.டன், இருப்பு 145 மெ.டன் என மொத்தம் 6831 மெ.டன் உரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 12,177 மெ.டன் உரம் இருப்பு உள்ளன. அதேபோல், விதை உள்ளிட்ட இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன.

வேளாண்மை பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞர்கள் வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, வேளாண் பட்டதாரி இளைஞர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் நெல் நடவு செய்வதற்கு முன்பு வரப்பின் ஓரங்களில் தட்டைபயிறு, பாசிபயிறு, உளுந்து உட்பட பயிர் வகைகளை விதைத்து, பூச்சி தாக்கத்திலிருந்து நெல் பயிரை பாதுகாக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இன்றையக் கூட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் 16 விவசாயிகளுக்கு ரூ.79.40 இலட்சம் பெருளீட்டுக்கடனும், 5 விவசாயிகளுக்கு தள்ளுபடி விலையில் மக்காச்சோள பயிறுக்கு நானோ யூரியா, போகர் ஜெல், மாக்காசோள விதை அடங்கிய தொகுப்பும், 5 விவசாயிகளுக்கு தார்பாய்கள் ஆகிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.குருமூர்த்தி, இணை இயக்குநர்(வேளாண்மைத்துறை) திரு.அ.பாண்டியன், இணை இயக்குநர்(கால்நடை பராமரிப்புத்துறை) மரு.பாபு, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருமதி உமா, வேளாண்மை துணை இயக்குநர் திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.நாகேந்திரன் உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.