மூடு

வெப்பம் சார்ந்த நோய்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2025
.

செ.வெ.எண்:-75/2025

நாள்:-27.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

வெப்பம் சார்ந்த நோய்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வெப்பம் சார்ந்த நோய்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.03.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

கோடைகாலங்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக்கூடும் பொதுவாக மனிதனின் சாதாரண உடல் வெப்பநிலை சுமார் 37 டிகிரி சென்டி கிரேடு (36.1-37.8 C) ஆகும். வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இளம் சிறார்கள் மற்றும் நாட்பட்ட உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகக்கூடும்.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பகல் 12 மணி முதல் மதியம்3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

வெயில் காலங்களில், தோலில் சிறுசிறு கொப்பளங்கள், வீக்கம், வெப்ப பிடிப்புகள், சூடான மற்றும் வறண்ட தோல் தடிமம், சோர்வடைதல், வெப்ப பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். இந்த நோயின் அறிகுறிகளாக வறண்ட தோல் நோய், அதிகமான தாகம், வாந்தி, தலைவலி, பலவீனம், உடற்சோர்வு, சிறுநீர் அளவு குறைதல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் எரிச்சலுடன்(கடுத்து) போதல், அதிக அல்லது இல்லாத வியர்வை, தசைப்பிடிப்பு, லேசான தலை சுற்றல், வலிப்பு போன்றவை வெளிப்படும்.

உடலில் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும். தேநீர், காபி, கார்போனைட் குளிர் பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கஞ்சி, ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் போன்ற குளிர் பானங்களை பருக வேண்டும். கோடை காலங்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும். கடினமான உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்டவுடன் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். கோடை காலங்களில் மெல்லிய தளர்ந்த கதர் ஆடைகளை அணிய வேண்டும். தேவையெனில் துணிகளை ஈரப்படுத்தி கழுத்து மற்றும் கைகளில் துடைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் செல்லும்போது குடை வைத்துக்கொள்ள வேண்டும். காலணிகள் அணியாமல் வெளியே செல்லக்கூடாது. இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியாக அமர்த்திவிட்டு செல்லக்கூடாது. குழந்தைகளுக்கு சிறுநீர் மஞ்சள் நிறமாக இருப்பதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மயக்கம் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். அரசின் 100 நாட்கள் வேலைத்திட்ட பணியின்போது போதிய குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

கடுமையான வெயிலில் கடினமான வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் போதுமான அளவில் குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காற்றோட்ட வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியின்பொழுது தலை சுற்றல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றினால் அந்த நபரை குளிர்ந்த சூழல் உள்ள இடத்திற்கு அழைத்துச்சென்று போதுமான திரவங்கள் மற்றும் தேவையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

தனியாக வசிக்கும் முதியவர்கள் உடல் நிலையை தினமும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்கள் அருகில் அவசர தேவைக்கான தொலைபேசி உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவெளியில் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தசைப்பிடிப்புகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தால் உடனே மருத்துவ கவனிப்பு அளிக்க வேண்டும், மயக்கம், வலிப்பு மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக 108 அவசர ஊர்தியை வரவழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகள், 11 தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள், 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 346 துணை சுகாதார நிலையங்களில் வெப்பச்சலனம் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய போதுமான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கில் 2,00,000 ஓஆர்எஸ் (ORS) கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் 1,05,000-IV Fluids கையிருப்பில் உள்ளன. மாவட்டம் முழுவதும் 40427 – ஓஆர்எஸ்(ORS) கரைசல் பாக்கெட்டுகள், 32,725-IV Fluids கையிருப்பில் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட தனிவார்டு இதற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெயில் பாதிப்பு தொடர்பாக அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவை- 108, சுகாதார உதவி-104, 24×7 கட்டுப்பாட்டுஅறை (பொதுசுகாதாரம்)- 0451-2432817 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, இணை இயக்குநர்(சுகாதார நலப்பணிகள்) மரு.பூமிநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.