வேலைவாய்ப்பு துறை – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
செ.வெ.எண்:-50/2026
நாள்:-19.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 786 தனியார் நிறுவனங்களில் 2051 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பினை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் எண்ணற்ற வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சம் பேரை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்காலத்தில் எந்த துறையில் படிக்க வேண்டும் என்பதை பள்ளியில் படிக்கும்போதே தங்களை தயார்படுத்திக்கொண்டு, குறிக்கோளுடன் படிக்க வேண்டும் என்பதற்காக 9 முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு தொடர் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.படித்த இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்று உயரிய நிலையை அடைகின்ற நோக்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலம் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வேலைவாய்ப்புத் துறையால் தனியார்துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு, படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், முன்னணி நிறுவனங்களை பங்கேற்க செய்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாமில் எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு. பொறியியல் படித்த இளைஞர்கள் கல்வித் தகுதிக்கேற்ப பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து சிறிய அளவில் மாதம்தோறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 2024-25ஆம் ஆண்டில் நடைபெற்ற 11 முகாம்களில் 1,020 வேலை நாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில் 139 தனியார் நிறுவனத்தினர் கலந்துகொண்டு 276 நபர்களை தேர்வு செய்தனர். 2025-26-ஆம் ஆண்டில் நடைபெற்ற 7 முகாம்களில் 747 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில் 139 தனியார் நிறுவனத்தினர் கலந்துகொண்டு 219 நபர்களை தேர்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2024-25ஆம் ஆண்டில் நடைபெற்ற 2 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 4,606 வேலை நாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில் 350 தனியார் நிறுவனத்தினர் கலந்துகொண்டு 944 நபர்களை தேர்வு செய்தனர். 2025-26-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு முகாமில் 2,132 வேலைநாடுநர்கள் கலந்துகொண்டனர். இதில் 158 தனியார் நிறுவனத்தினர் கலந்துகொண்டு 612 நபர்களை தேர்வு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம்இ நிலக்கோட்டை வட்டம், பாலம்பட்டியைச் சேர்ந்த திரு. பா.நந்தபாண்டி தெரிவித்ததாவது:-
என் பெயர் நந்தபாண்டி. நான் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பாலம்பட்டியில் வசித்து வருகின்றேன். நான் இளங்கலை பட்டப்படிப்பை (அறிவியல்) பி.எஸ்.சி முடித்தேன். படிப்பு முடித்தவுடன் ஒரு சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தேன். ஆனால் அங்கு கல்வித்தகுதிக்கேற்ற பணிக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 19.09.2025 அன்று கலந்து கொண்டேன். அன்றைய தினமே ஒரு தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலைவாய்ப்பு வாய்ப்பு கிடைத்தது. மாதச்சம்பளம் ரூ.15,000 என்று தெரிவித்தனர். நான் அதற்கு சம்மதித்து, அந்த தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறேன். மேலும், இதுபோன்ற அரசு சார்பில் நடத்தப்படும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அந்த வேலைவாய்ப்பில் உறுதித்தன்மை ஏற்படுவதுடன், எங்களுக்கு தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னைப் போன்ற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நிலையை கருத்தில் கொண்டு இதுபோன்ற அரசின் எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த திரு.பாண்டியன் அவர்கள் தெரிவித்ததாவது:-
நான் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் வசித்து வருகிறேன். நான் பி.எஸ்.சி (வேதியியல்) பிரிவில் பட்டம் பெற்றுள்ளேன். எனது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். விவசாயக் கூலி வேலைக்கு மிகக் குறைந்த வருமானமே கிடைக்கும். எனவே, எனது பெற்றோர் ஈட்டி வரும் மிகக் குறைந்த வருமானத்தில், குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் நானும் ஏதாவது வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். ஓரிரு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்றேன். அங்கு மிகவும் குறைந்த அளவு சம்பளமே கிடைத்தது. இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதை அறிந்தேன். ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தனியார்த்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டேன். இந்ந வேலைவாய்ப்பு முகாம் காலை 08.30 மணி முதல் மாலை 03.00 மணி வரை வேலை வாய்ப்பு நடைபெற்றது. இம்முகாமில் ITI, டிப்ளோமோ, டிகிரி முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம் என தெரிவித்தார்கள். அதன்பேரில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டேன். அங்கு தனியார்துறை நிறுவனத்தினர் எனது சான்றிதழ்களை சரிபார்த்தனர். அன்றைய தினமே ஒரு தனியார் நிறுவனத்தில் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. மாதச்சம்பளம் ரூ.17,000 என்று தெரிவித்தனர். நான் அதற்கு சம்மதித்து, அந்த தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறேன். இந்த வருமானம் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களைப் போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வருகின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, தொழில் தொடங்க தேவையான பல்வேறு பயிற்சி வகுப்புகள், அரசு தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள பல்வேறு பயிற்சி வகுப்புகள், தனியார் துறையின் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் பொருட்டு வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் பயன்பெற்று அவர்களது வாழ்வாதாராம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களின் வாழ்வினை மேம்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்றால் அது மிகையாகாது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.