மூடு

21-வது கால்நடைக் கணக்கெடுப்பு அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2024

செ.வெ.எண்:-59/2024

நாள்:-25.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

21-வது கால்நடைக் கணக்கெடுப்பு அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்தியாவில் கால்நடைக் கணக்கெடுப்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. கடந்த முறை 20-வது கால்நடைக் 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. தற்போது 2024-ஆம் ஆண்டில் 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு தொடங்கப்படவுள்ளது. அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்படவுள்ள 21-வது கால்நடைக் கணக்கெடுப்பு புதுடெல்லியில் 25.10.2024 அன்று மாண்புமிகு மத்திய அரசின் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு.ஸ்ரீ ராஜிவ் ரஞ்சன் சிங் அவர்கள் தலைமையில் தொடங்கப்படவுள்ளது. அது சமயம் திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைக் கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செட்டிநாயக்கண்பட்டி அருகே ராஜக்காப்பட்டி கிராமத்தில் 25.10.2024 அன்று பகல் 1.00 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் கிராம வாரியாகவும் மற்றும் நகர்புறங்களில் வார்டு வாரியாகவும் கால்நடைக் கணக்கெடுப்பு நடைபெறும். கால்நடைகள் உள்ள மற்றும் இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பண்ணைகள், இறைச்சி மற்றும் முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கோசாலைகளில் உள்ள தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த பணியினை மேற்கொள்ள 216 எண்ணிக்கை கால்நடைக் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 45 மேற்பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கால்நடைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல் செயலி மற்றும் இணையதள பயன்பாடுகள் குறித்து நேர்முக மற்றும் களப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண் அவர்களிடம் உள்ள நில அளவு, முக்கியத் தொழில், கல்வித் தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை இனம், வயது, பாலினம், அதன் பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கணக்கெடுப்பு விரைவாக நடத்தப்படவுள்ளதால், வீடு தேடி வரும் கால்நடை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் புள்ளி விவர அலுவலர்களிடம் கால்நடைகள் குறித்த உரிய விவரங்களை பொதுமக்கள் வழங்கி தக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.