‘Coffee with Collector’ – சமூக ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-39/2025
நாள்:-14.01.2026
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ – சமூக ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 15.12.2025 வரை 23 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர் 27 பேர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 25 பழங்குடியின இளைஞர்கள், சமூக ஊடகவியலாளர்கள் 40 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இருபத்து நான்காவது நிகழ்வாக சமூக ஊடகவியலாளர்கள் 28 பேருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு அரசு தமிழக மக்கள், பெண்கள், மாணவ/மாணவியர், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நலன் சார்ந்து சிறப்பான முன்னெடுப்புகள் பலவற்றை எடுத்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அலுவல் ரீதியாக பொதுமக்களை சென்று சேர்ந்தாலும், சமூக ஊடகவியலாளர்களால் தகவல்கள் பகிரப்படும் பட்சத்தில் அனைவருக்கும் எளிதில் சென்று சேரும் வாய்ப்பு உள்ளது. தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன், வெற்றி நிச்சயம், அன்புக்கரங்கள், திறன் வளர்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்த சமூக அக்கறையுடனான பதிவுகள் சமூக ஊடகவியலாளர்களுக்கு மன திருப்தியைத் தரும். பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்லாது அரசு போட்டித் தேர்வுகள், பள்ளி/கல்லூரி விழிப்புணர்வு நிகழ்வுகள், காவல்துறை மூலம் வழங்கப்படும் வழிகாட்டுதல்கள் தொடர்பான நேர்மறையான சமூக ஊடக பதிவுகள் அடுத்த தலைமுறைக்கு பேருதவியாக இருக்கும்.
திண்டுக்கல் புத்தகத் திருவிழா, சமீபத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ/மாணவியரிடம் கொண்டு சேர்த்ததில் சமூக ஊடகவியலாளர்களின் பங்கு மகத்தானது. இதேபால், அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இச்செய்தியையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூக ஊடகவியலாளர்கள் பங்கு சிறப்பாக அமைந்திட வேண்டும். அதேநேரம் சமூக ஊடகத்தில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் தாங்களே பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும். தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்து பதிவிட வேண்டும். இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் சமூக ஊடகத்தின் பங்கு அளப்பரியது. சமூகத்திற்குத் தேவையான பல்வேறு செய்திகளை தொடர்ந்து பதிவிடும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சமூக ஊடகவியலாளர்களுக்கு பாராட்டுக்கள்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா, முதலமைச்சர் கணினித் தமிழ் விருதாளர் திரு.நீச்சல்காரன் இராஜாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.