‘Coffee with Collector’ – முதல்முறை வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-34/2025
நாள்:-10.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ – முதல்முறை வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 03.11.2025 வரை 18 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 325 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த 25 இளைஞர்கள் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (10.11.2025) பத்தொன்பதாவது நிகழ்வாக 18 வயது பூர்த்தியடைந்த, முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ/மாணவியர் 20 நபர்களுடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள தேர்தல் நடைமுறைகள், ஒரு கட்சி, இரு கட்சி மற்றும் பல கட்சிகள் கொண்ட நாடுகளில் உள்ள பல்வேறு அரசியலமைப்புச் சட்டங்கள், தமிழ்நாட்டிலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் உள்ள பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான பல்வேறு அம்சங்களை மாவட்ட ஆட்சியர் கல்லூரி மாணவ/மாணவியரிடம் பகிர்ந்து கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், கணக்கெடுப்புப் படிவம், அது தொடர்பான நடைமுறைகள், ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விளக்கிக் கூறினார். 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர் சேர்க்கை, வரைவு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி நிலை அதிகாரி, தேர்தல் பதிவு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள்,
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோரின் பணிகள், தேர்தல் நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்பதன் பொருள், தேர்தல் தொடர்பான சமூகப் பார்வை, அதன் மூலமான சமூக முன்னேற்றம் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விரிவாக கலந்துரையாடினார். கல்லூரி மாணவ/மாணவியர் தவறாமல் தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும், அரசியல் என்பது வேறு ஆனால் அரசியலமைப்பு நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 5000-க்கும் அதிகமான அலுவலர்கள்/பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ.முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.