Coffee with Collector – கல்லூரி தேசிய மாணவர் படை (NCC)
செ.வெ.எண்:-04/2026
நாள்:-02.03.2026
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ –கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 16.02.2026 வரை 27 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர் 27 பேர், நாட்டுநலப்பணித் திட்ட மாணவியர் 25 பேர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 55 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 25 பழங்குடியின இளைஞர்கள், சமூக ஊடகவியலாளர்கள் 40 பேர், புத்தொழில் முனைவோர்கள் 35 பேர் மற்றும் ஏனைய பிற துறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று (02.03.2026) இருபத்து எட்டாவது நிகழ்வாக திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் 25 பேருடன் ‘Coffee with Collector’ கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசியதாவது: திண்டுக்கலில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவின்போது ஜி.டி.என். கலைக்கல்லூரியில் பயிலும் ‘14 தமிழ்நாடு தேசிய மாணவர் படை பட்டாலியன்’ பிரிவு மாணவர்களாகிய நீங்கள் வழங்கிய சிறப்பான பங்களிப்பிற்கு பாராட்டுக்கள். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொண்ட இத்திருவிழாவில் உங்களுடைய ஒருங்கிணைப்புப் பணி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தேசிய மாணவர் படையினரை இன்று சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதன் மூலமாக பெறும் பாராட்டு மட்டுமல்லாது கிடைக்கின்ற அனுபவமும் முக்கியமானதாகும். அந்த அனுபவம் அடுத்தடுத்த பணிகளில் சிறப்பான திட்டமிடுதலை அமைத்துக்கொள்ள உதவும். எதிர்காலம் மற்றும் இலக்கு குறித்த தெளிவான பார்வை அவசியம். உயர்வான இலக்கை நிர்ணயித்தல், இலக்கை அடைதல் என்பது உரிய வேகத்தில் நிகழ வேண்டும். தேசிய மாணவர் படையில் இணைந்துள்ளதால் சுய ஒழுக்கம் இயல்பாகவே உங்களிடம் இருக்கும், அத்துடன் வகுப்பறை கற்றலும் முக்கியம். மொழித்திறன்கள் மற்றும் தொடர்புகொள்ளுதல் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும்போது அத்தேர்வு தொடர்பான பாடத்திட்டம் குறித்த தெளிவு விண்ணப்பிக்கும்போதே இருக்க வேண்டும்.
உங்கள் இலக்கு உங்களுடைய விருப்பம் மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டுமே தவிர பிறர் வற்புறுத்துவதாலோ அல்லது நண்பர்களுக்காகவோ அமைந்துவிடக் கூடாது என அறிவுரை வழங்கினார். மேலும், தேசிய மாணவர் படை அலுவலர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்காலத் திட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேசிய மாணவர் படை குழுக்கள் தொடர்பான விபரங்கள், அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தார். கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெற்ற இராணுவ வீரர்களுக்கான தேர்வில் ‘14 தமிழ்நாடு தேசிய மாணவர் படை பட்டாலியன்’ பிரிவினைச் சார்ந்த 72 பேர் அக்னிவீரர்களாகத் தேர்வு பெற்றுள்ள தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவின்போது தேசிய மாணவர் படை தன்னார்வலர்களாக சிறப்பாகச் செயல்பட்டமைக்கான பாராட்டுச் சான்றிதழ்களையும் நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் ஜி.டி.என். கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் சு.சரவணன், ‘14 தமிழ்நாடு தேசிய மாணவர் படை பட்டாலியன்’ பிரிவின் ஆபிசர் கமாண்டிங் லெப்டினெட் கர்னல் சு.ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.