மூடு

‘Coffee with Collector’ – திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2025
.

செ.வெ.எண்:-74/2025

நாள்:-18.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 11.08.2025 வரை ஏழு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 175 மாணவ/மாணவியர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (18.08.2025) எட்டாவது நிகழ்வாக திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாணவியருடன் கலந்துரையாடி அவர்களின் ஆர்வம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு, நான் முதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினார்.

மாணவியரிடம் அவர்களின் இலட்சியம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மூலம் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்தும், அதில் முழு ஈடுபாட்டுடன் நிர்ணயித்த இலக்கை நோக்கிச் சென்றால் வெற்றி பெற முடியும் என ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உள்ளன, அவற்றை வளர்த்துக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மாணவியர் தங்கள் எதிர்கால திட்டங்கள், இலக்குகள் குறித்தும், அவற்றை அடைவதற்கான வழிகாட்டுதல்கள் பற்றியும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடினர். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு அரசு மாணவ/மாணவியர் மற்றும் பெண்களுக்காக அதிக அளவில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றும், அதன் காரணமாக தற்சமயம் பெண்கள் கல்லூரிப் படிப்பிற்குச் செல்வது அதிகரித்துள்ளது என்றும், கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு தங்கள் இலக்கை நோக்கி பயணிப்பதில் மாணவியர் தயக்கமோ குழப்பமோ அடையக் கூடாது எனவும், மகளிருக்கான அங்கீகாரத்தை கட்டாயம் பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

தாம் சார்ந்த துறையில் சாதிப்பது தொடர்பான கனவு பெரிதாக இருக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் சிறப்புப் பயிற்சிகள், நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்துவது, சமூக வலைதளங்களில் அன்றாட துறைசார் நிகழ்வுகள் பற்றி அறிதல், தினசரி செய்தித்தாள் வாசித்தல், உயர்ந்த இலக்குகளைத் தீர்மானித்தல், உயர்கல்விக்குப் பிறகான வேலைவாய்ப்புகள் பற்றி கலந்துரையாடல் செய்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைகள் வழங்கினார். மேலும், இலக்கு நோக்கிய தெளிவும், நம்பிக்கையும், திட்டமிடலும் அவசியம் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவியர் பொதுத்தேர்விற்காக தீவிரமாக படிப்பதோடு மட்டுமல்லாது போதுமான ஓய்வு மற்றும் உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பயிற்சி) மரு.த.மாலதி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் திருமதி.ச.பிரபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.