‘Coffee with Collector’ – பெற்றோர் இருவரையும் இழந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்புகளால் உயர்கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைம
செ.வெ.எண்:-99/2025
நாள்:-17.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
‘Coffee with Collector’ – பெற்றோர் இருவரையும் இழந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்புகளால் உயர்கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 17.11.2025 வரை 21 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 365 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 30 பேர், மருத்துவர்கள்/செவிலியர்கள் 25 பேர், விவசாயிகள் 37 பேர், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் 26 பேர், கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த திறன் வளர்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட 25 பழங்குடியின இளைஞர்கள், சமூக ஊடகவியலாளர்கள் 40 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, இன்று (24.11.2025) இருபத்து இரண்டாவது நிகழ்வாக பெற்றோர் இருவரையும் இழந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்புகளால் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று பயின்று வரும் 20 மாணவ/மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ/மாணவியர்களிடம் அவர்கள் பயின்று வரும் பாடப்பிரிவு, முதல் பருவத்தேர்வை எதிர்கொண்ட விதம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட திறன் அலுவலகமான திறனகத்தை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு மாணவ/மாணவியர் நலன் சார்ந்து நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட சிறப்பான முன்னெடுப்புகள் பலவற்றை எடுத்து வருகிறது. இதன் மூலமாக பெற்றோர் இருவரையும் இழந்த நிலையிலும் மனம் தளராது உயர்கல்வி பயின்று வரும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். உயர்கல்வியைத் தொடர்வது சார்ந்து வேறு ஏதேனும் பொருளாதார ரீதியான உதவிகள் தேவை என்றாலும் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். இதற்காகவே மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘திண்டுக்கல் கல்வி அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் நன்றாகப் பயின்று நல்ல பதவியில் அமர வேண்டும். சுயசார்புடன் திகழ வேண்டும்.
இதுவரை உங்களை கவனித்து வரும் உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பெருமை கொள்ளத்தக்க விதத்தில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சவால்கள் எதுவாயினும் அதனை சமாளித்து நேர்மையான பாதையில் பயணிக்க வேண்டும். கல்வி ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும், எனவே அதிலிருந்து விலகிச் சென்றுவிடக்கூடாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் உங்கள் படிப்பிற்கேற்ற வகையில் பயன்படுத்த தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் ‘திறனகம்’ மூலமாக பல்வேறு வகையான திறன் பயிற்சிகள் குறித்தும், அதன் மூலமாக கிடைக்கப்பெறும் வேலைவாய்ப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். நன்மை தரும் விக்ஷயங்கள் எவை என்பதனை பகுத்தறிந்து செயல்பட வேண்டும். நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வும் அவசியம். உயர்கல்வி பயிலும் காலத்திலேயே துறை சார்ந்த பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் மாணவியர்கள் உதவிக்காக சமூக நலத்துறையின் உதவி எண் 181 –ஐ தொடர்பு கொள்ளலாம். கல்வி ஒன்றின் மீதே உங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி.சா.காலின் செல்வராணி, மாவட்ட திறன் அலுவலர் திருமதி.பொ.பவித்ரா, மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளர் (கல்வி) திரு.அ.சரவணக்குமார், பள்ளிக்கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அ.சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.