மூடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறைகொண்டு 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று துவங்கப்பட்டு கடந்த 42 ஆண்டுகளாக தாய்சேய் நலன் மற்றும் மேம்பாட்டுக்கு அரும்பணியாற்றி வருவதுதான் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்.

இத்திட்டம் தமிழகத்தில் முதன் முதலாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரத்திலும், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் தளி வட்டாரத்திலும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி வட்டாரத்திலும் துவங்கப்பட்டு தற்போது தமிழகத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செயல்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள்

ஊட்டச்சத்து குறைபாடில்லாத தமிழகத்தை நோக்கி”- என்கிற விரிந்த பார்வையுடன் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலை மற்றும் உடல்நலத்தை மேம்படுத்தி தாய்மரணம் மற்றும் சிசுமரணத்தை முற்றிலும் ஒழிப்பதே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

  1. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மனம், அறிவு, மொழி, இயக்கம் மற்றும் சமூக வளர்ச்சிக்குரிய முன்பருவக்கல்விச் செயல்பாடுகளை அளிப்பதும்
  2. கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார் மற்றும் வளரிளம் பெண்களுக்கு உடல்நலக்கல்வி அளிப்பதுடன் சுகாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதும்
  3. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சீரிய செயல்பாட்டிற்கு சமுதாய பங்கேற்பினை ஊக்குவிப்பதும்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் பயனாளிகள்
பயனாளிகள் பெறும் பயன்கள்
0-6 மாதக் குழந்தைகள் தடுப்பூசி அளித்தல், வளர்ச்சி கண்காணிப்பு, தேவை இருப்பின் மருத்துவ பரிந்துரை
6 மாதம் – 1 வயது குழந்தைகள் தடுப்பூசி அளித்தல், வளர்ச்சி கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், தேவை இருப்பின் மருத்துவ பரிந்துரை
1-2 வயது குழந்தைகள் தடுப்பூசி அளித்தல், வளர்ச்சி கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், வாரம் ஒரு நாள் முட்டை வழங்குதல், தேவை இருப்பின் மருத்துவ பரிந்துரை
2-5+ வயது குழந்தைகள் தடுப்பூசி அளித்தல், வளர்ச்சி கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், மதிய உணவு வழங்குதல், முன்பருவக் கல்வி அளித்தல், தேவை இருப்பின் மருத்துவ பரிந்துரை
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார் (0-6 மாத குழந்தகளின் தாய்மார்) தடுப்பூசி அளித்தல், வளர்ச்சி கண்காணிப்பு, இணை உணவு வழங்குதல், வைட்டமின் ஏ திரவம் வழங்குதல், ஊட்டச்சத்து மற்றும் நலக்கல்வி அளித்தல், தேவை இருப்பின் மருத்துவ பரிந்துரை
வளர் இளம் பெண்கள் (11-19 வயது வரை) வாழ்க்கை கல்வி பயிற்சி அளித்தல், தொழிற்பயிற்சி அளித்தல், ஊட்டச்சத்து மற்றும் நலக்கல்வி அளித்தல்.
*இணை உணவு மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு( சப்ளா திட்டம் நடைமுறையில் உள்ள மாவட்டங்களில் மட்டும்)

அங்கன்வாடி மையத்தில் நடைபெறும் பணிகள்

  • அங்கன்வாடி மையப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கர்ப்பம் எனத் தெரிந்தவுடன் மையத்தில் பதிவு செய்தல்.
  • கர்ப்பிணிகளுக்கு மாதாமாதம் எடையைக் குறித்து வளர்ச்சியைக் கண்காணித்தல், மற்றும் தடுப்பூசி அளித்தல்
  • கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு (குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு) நாளொன்றுக்கு 160 கிராம் இணை உணவு வழங்கப்படுவதோடு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக்கல்வி அளித்தல்
  • குழந்தைகளுக்கு அனைத்து விதமான தடுப்பூசிகளையும் வழங்குதல்
  • 6 மாதம் முதல் 3 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இணை உணவு வழங்குதல்.
  • 0-3 வயது குழந்தைகளுக்கு மாதாமாதம் எடை எடுத்து வளர்ச்சி கண்காணிப்பு அட்டையில் பதிவு செய்து வளர்ச்சி நிலைகளை கண்காணித்தல்
  • 3-5 வயதுள்ள குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடை எடுத்து வளர்ச்சி கண்காணிப்பு அட்டையில் பதிவு செய்து வளர்ச்சி நிலைகளை கண்காணித்தல் t
  • 0-6 வயது குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார், வளரிளம் பெண் ஆகியோரின் வீடுகளைப் பார்வையிட்டு நலக்கல்வி அளித்தல்
  • முன்பருவக்கல்வி பெறும் குழந்தைகளுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைக்கச் செய்யும்வகையில் வார நாட்களில் ஊட்டச்சத்துமிக்க ஐந்து வகை சாதங்கள் கீழ்கண்ட நாட்களில் தமிழக அரசால் வழங்கப்பட்டுவருகின்றன
கிழமைகள் வழங்கப்படும் சாத வகை
திங்கள் தக்காளி சாதம் + முட்டை
செவ்வாய் காய்கறி கலவை சாதம் + சுண்டல்/பாசிப்பயறு
புதன் காய்கறி புலாவ் + முட்டை
வியாழன் எலுமிச்சை சாதம் + முட்டை
வெள்ளி பருப்பு சாதம் + உருளைக் கிழங்கு
சனி காய்கறி கலவை சாதம்

0-6 வயது குழந்தைகளுக்கு ஏற்படும் இயலாமையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான பயிற்சி மையங்களுக்கு அனுப்பி இயலாமையின் தன்மையை பெருமளவு குறைக்க வழி செய்தல்

2-5+ வயதுள்ள குழந்தைகளின் உடல், மனம், அறிவு, மொழி, இயக்கம் மற்றும் சமூக வளர்ச்சியைத் தூண்டும் வகையில் முன்பருவக்கல்விச் செயல்பாடுகளை அளித்தல்

ஆறு மாதம் முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து மற்றும் வைட்டமின் ஏ திரவம் வழங்குதல்

குழந்தைகளுக்கு இருப்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில திரவம் வழங்குதல்

அங்கன்வாடி மையப்பகுதிகளில் வசிக்கும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி அளித்தல். மேலும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வாழ்க்கைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி அளித்தல்

மாதாமாதம் அங்கன்வாடி மையப்பகுதிக்குட்ப்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள், தாய்மார், வளரிளம்பெண்கள், சிறுவர் குழுக்கூட்டங்கள் நடத்துதல், கிராம சுகாதார ஊட்டச்சத்து தினம், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி தினம் நடத்தி மையப்பணிகள் பற்றி எடுத்துக்கூறுதல்

உட்டச்சத்து வாரவிழா, தாய்ப்பால் வார விழா, ஒகுவதி வாரம், உலக உணவு தினம், கை கழுவும் தினம், அயோடின் தினம், குழந்தைகள் தினம் முதலிய விழாக்களை நடத்தி மக்கள் மத்தியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தினை பரவலாக்குதல்

சமுதாய வளைகாப்பு, பாரம்பரிய உணவு திருவிழா, புது மணத் தம்பதியர் விழிப்புணர்வு பணியரங்கம், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆகியோருக்கு விழிப்புணர்வு பணியரங்கம் முதலிய நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தினை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்த்தல்
மையம் சிறப்பாக செயல்படுவதற்கு சமுதாயப் பங்கேற்பினை ஊக்கப்படுத்துதல்

மேற்கண்ட பணிகள் அனைத்தும் அங்கன்வாடி மையங்களின் மூலம் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும் 500 முதல் 1000 வரை மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமம்/ குக்கிராமம்/வார்டு/பகுதிக்கு ஒரு அங்கன்வாடி மையமும், 300 முதல் 500 வரை மக்கள் தொகை கொண்ட கிராமப்பகுதிகளில் ஒரு குறு மையமும் செயல்பட்டுவருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2035 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திலும் அங்கன்வாடி பணியாளரும் அங்கன்வாடி உதவியாளரும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் பணிகள் அனைத்தையும் பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விபரங்களுக்குஅணுகவேண்டிய முகவரி
மாவட்ட திட்ட அலுவலர்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்,
திண்டுக்கல்-624001
தொலைபேசி எண்: 0451-2422351