Close

C.M. state Youth award

Publish Date : 08/05/2024

செ.வெ.எண்:-01/2024

நாள்:-02.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது 15.08.2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெற தகுதிகள் வருமாறு:-

 இவ்விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2024 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.

கடந்த நிதியாண்டில் (2023-2024) அதாவது 01.04.2023 முதல் 31.03.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

 விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).

 விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும், இருத்தல் வேண்டும்.

 மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

 விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

 விண்ணப்பங்களை இணையதளம் மூலம் 15.05.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in-ல் பார்த்து அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை, மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504 என்ற கைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.