Close

Pudhumai Penn Thittam

Publish Date : 28/05/2024

பத்திரிகைச் செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் “புதுமைப்பெண்“ திட்டத்தில் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17 இலட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏழை எளியோரின் நலன்களில் எந்நாளும் அக்கறைக்கொண்டுள்ள திராவிடமாடல் ஆட்சியின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைப்பதிக்கும் மூன்று ஆண்டுகால ஆட்சி என்றென்றும் தொடரட்டும்…!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் “புதுமைப்பெண்“ திட்டம் துவங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்டத்தின் (Right to Education) கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல். உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உள்ளத்தில் உதித்த உன்னதத் திட்டமே புதுமைப்பெண் திட்டமாகும். (மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம்). இத்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 இலட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ உதவித்தொகை வழங்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் “புதுமைப்பெண்“ திட்டத்தில் 08.02.2024 வரை சட்டமன்ற தொகுதி வாரியாக பயன்பெறும் பயனாளிகள் விபரம் வருமாறு:-

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 1,845 பயனாளிகளுக்கு ரூ.18.45 இலட்சம், பழனி சட்டமன்ற தொகுதியில் 660 பயனாளிகளுக்கு ரூ.6.60 இலட்சம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 845 பயனாளிகளுக்கு ரூ.8.45 இலட்சம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 656 பயனாளிகளுக்கு ரூ.6.56 இலட்சம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 183 பயனாளிகளுக்கு ரூ.1.83 இலட்சம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 487 பயனாளிகளுக்கு ரூ.4.87 இலட்சம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 441 பயனாளிகளுக்கு ரூ.4.41 இலட்சம், என மொத்தம் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17 இலட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாக அடித்தளமாக “புதுமைப் பெண்” என்னும் உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.