Close

TNPSC- Examination – Meeting

Publish Date : 28/05/2024
.

செ.வெ.எண்:-24/2024

நாள்:-21.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(21.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று காலை 09.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக, ஆத்துார் வட்டத்தில் 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 18 தேர்வு மையங்களில் 4,351 தேர்வர்களும், 5 நடமாடும் குழுக்கள், ஒரு பறக்கும் படையும், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 40 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 48 தேர்வு மையங்களில் 12,733 தேர்வர்களும், 12 நடமாடும் குழுக்களும், 3 பறக்கும் படைகளும், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 36 தேர்வு மையங்களில் 9825 தேர்வர்களும், 9 நடமாடும் குழுக்களும், 3 பறக்கும் படைகளும், குஜிலியம்பாறை வட்டத்தில் 6 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 தேர்வு மையங்களில் 1571 தேர்வர்களும், 2 நடமாடும் குழுக்களும், ஒரு பறக்கும் படையும், கொடைக்கானல் வட்டத்தில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5 தேர்வு மையங்களில் 1124 தேர்வர்களும், 2 நடமாடும் குழுக்களும், ஒரு பறக்கும் படையும், நத்தம் வட்டத்தில் 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 10 தேர்வு மையங்களில் 2739 தேர்வர்களும், 4 நடமாடும் குழுக்களும், ஒரு பறக்கும் படையும், நிலக்கோட்டை வட்டத்தில் 28 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 34 தேர்வு மையங்களில் 8896 தேர்வர்களும், 8 நடமாடும் குழுக்களும், 2 பறக்கும் படைகளும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 15 தேர்வு மையங்களில் 3976 தேர்வர்களும், 5 நடமாடும் குழுக்களும், ஒரு பறக்கும் படையும், பழனி வட்டத்தில் 31 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 38 தேர்வு மையங்களில் 9958 தேர்வர்களும், 10 நடமாடும் குழுக்களும், 2 பறக்கும் படைகளும், வேடசந்துார் வட்டத்தில் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 17 தேர்வு மையங்களில் 4442 தேர்வர்களும், 5 நடமாடும் குழுக்களும், ஒரு பறக்கும் படையும் என ஆக மொத்தம் 186 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 228 தேர்வு மையங்களில் ஆக மொத்தம் 59,615 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். அதற்காக 62 நடமாடும் குழுக்களும், 16 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் எவ்வித சிரமமும் இன்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வினாத்தாள் வரப்பெற்றது முதல் உரிய பாதுகாப்பு மற்றும் தேர்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொள்ளவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தேவையான பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வாகனத்துடன் தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் அனைத்து வட்டங்களிலும் 09.06.2024 அன்று காலை 09.00 மணி முதல் பகல் 01.00 மணி வரை தடையின்றி மின் விநியோகம் செய்யவும், தேர்வு மையங்கள் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், தேர்வர்களுக்குத் தேர்வு எழுதுவதற்குத் தேவையான தளவாடச் சாமான்கள், மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து தேர்வு மையங்களையும் தேர்வு நாளுக்கு முன்னதாகவே ஆய்வு மேற்கொண்டு, தேர்வு எழுதுவதற்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்திட வேண்டும். அதில் ஏதேனும் தேவைகள் இருப்பின் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி தேவைகளை நிறைவேற்றிட வேண்டும்.

அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக மேற்கொண்டு, கண்காணித்து, ஒருங்கிணைத்து தேர்வு சிறப்பான முறையில் நடைபெற முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன், வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.