Close

Breakfast Scheme – 52,347 Students Benefited

Publish Date : 29/05/2024

பத்திரிகைச் செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்“ வாயிலாக 52,347 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

“படிப்பு ஒன்று தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து” என்பதன் அடிப்படையில் அனைத்து மாணவர்களும் எந்த காரணத்தை கொண்டும் கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி. பள்ளிகளில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமைகளில் ரவா காய்கறி கிச்சடி, புதன் கிழமைகளில் அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வியாழக்கிழமைகளில் வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமைகளில் சாமை கிச்சடி மற்றும் ரவா கேசரி(இனிப்பு) ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நகர்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18.5 இலட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தினால் பயனடைகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 64 பள்ளிகளைச் சேர்ந்த 2,933 மாணவ, மாணவிகளும், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 67 பள்ளிகளைச் சேர்ந்த 3,479 மாணவ, மாணவிகளும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட(ஊரகம்) 68 பள்ளிகளைச் சேர்ந்த 2,772 மாணவ, மாணவிகளும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட(நகர்ப்புறம்) 16 பள்ளிகளைச் சேர்ந்த 1,256 மாணவ, மாணவிகளும், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 90 பள்ளிகளைச் சேர்ந்த 2,783 மாணவ, மாணவிகளும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 பள்ளிகளைச் சேர்ந்த 2,407 மாணவ, மாணவிகளும், நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 106 பள்ளிகளைச் சேர்ந்த 7,254 மாணவ, மாணவிகளும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 82 பள்ளிகளைச் சேர்ந்த 4,434 மாணவ, மாணவிகளும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 90 பள்ளிகளைச் சேர்ந்த 2,667 மாணவ, மாணவிகளும், பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 72 பள்ளிகளைச் சேர்ந்த 3,464 மாணவ, மாணவிகளும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 83 பள்ளிகளைச் சேர்ந்த 2,944 மாணவ, மாணவிகளும், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 79 பள்ளிகளைச் சேர்ந்த 4,995 மாணவ, மாணவிகளும், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 101 பள்ளிகளைச் சேர்ந்த 2,314 மாணவ, மாணவிகளும், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 86 பள்ளிகளைச் சேர்ந்த 5,068 மாணவ, மாணவிகளும், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 91 பள்ளிகளைச் சேர்ந்த 3,577 மாணவ, மாணவிகளும் என ஆக மொத்தம் 1,150 பள்ளிகளைச் சேர்ந்த 52,347 மாணவ, மாணவிகள் காலை உணவுத் திட்டத்தின் வாயிலாக பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் மாணவ, மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளதோடு, அவர்களின் ஊட்டச்சத்தும், கற்றல் திறனும் மேம்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் உன்னத நோக்கத்தை மேலும் முழுமையாகச் செயல்படுத்தும் விதமாக இத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

புரட்சிகரமான இத்திட்டத்தை ஏனைய பிற மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடு கனடாவிலும் பின்பற்றப்படுகிறது. பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது.