Close

The Hon’ble Rural Development – Handloom textile Minister – Chinnalapatty

Publish Date : 18/06/2024
.

செ.வெ.எண்:-28/2024

நாள்: 14.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் சின்னாளப்பட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்து, 46 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் ஆகியோர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், துணிநூல் துறை ஆணையர் முனைவர் மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள், கைத்தறி துறை ஆணையர் திரு.கே.விவேகானந்தன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை இன்று(14.06.2024) திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கைத்தறி நெசவுத் தொழில் மற்றும் நெசவாளர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என 2023-24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்கள். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கப்பட்டு, இன்று(14.06.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சின்னாளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான கைத்தறி பூங்காவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 70 கைத்தறிகள் (நெசவுக்கு முந்தைய பணிகளுக்கான உபகரணங்களுடன்) நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் 90 நெசவாளர்கள் நேரடியாகவும், 160 நெசவாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். இங்கு மென் பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், டை மற்றும் டை சேலைகள், சுடிதார் இரகங்கள் போன்ற ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதன்மூலம் நெசவாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.550 முதல் 650 வரை ஊதியம் பெறும் வகையில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு விற்றுமுதல் ரூ.4.00 கோடி ஆகும்.

இன்றையதினம், நெசவாளர்களுக்கான ரூ.4.00 இலட்சம் மானியத்துடன் கூடிய வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட 39 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் பணிக்கான ஆணை, நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 வீதம் 3 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் கடனுதவிக்கான ஒப்பளிப்பு ஆணைகளும், 60 வயது நிரம்பிய நெசவாளர்களுக்கு அவர்களது ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.3,81,985 தொகை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சின்னாளப்பட்டி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்கு கைத்தறி நெசவுத் தொழிலை முக்கிய ஆதாரமாகக் கொண்டு ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். நெசவாளர்களுக்கு கூடுதல் வேலைநாட்கள் வழங்கவும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

விழாவில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் நெசவாளர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என 2023-24-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சின்னாளப்பட்டியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கப்பட்டு இன்று(14.06.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இது 3வது பூங்கா ஆகும்.

நெசவாளர்களுக்கு கூலி மிகவும் குறைவாக உள்ளது, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெசவாளர்களுக்கு குறைந்தது நாளொன்றுக்கு ரூ.1000 வருமானம் கிடைக்க வேண்டும் என்பற்காக இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதற்காக அதிக வருமானம் ஈட்டக்கூடிய வகையில், பொதுமக்கள் அதிகம் விரும்பும் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஜவுளி ரகங்களை அதிகளவில், தற்காலத்திற்கேற்ப புதிய ரகங்களை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறம்பட செயல்படுத்த முடியும். இந்த பூங்கா நெசவாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இது நெசவாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நெசவாளர்களுக்கான தேவைகள், கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

விழாவை முன்னிட்டு சின்னாளப்பட்டி பகுதியில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கைத்தறி கண்காட்சியும் நடைபெற்றது.

விழாவில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்துார் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி.இரா.பிரதீபா, பேரூராட்சி துணைத் தலைவர் திருமதி.பா.ஆனந்தி பாரதிராஜா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் திருமதி தே.மேகலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.