Close

Jamabhandhi Natham-1433 Fasali – Final day

Publish Date : 24/06/2024
.

செ.வெ.எண்:-41/2024

நாள்:-20.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நிறைவு நாளான இன்று(20.06.2024) வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் 18.06.2024 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களைப் பெற்று, தகுதியுடைய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நத்தம் வருவாய் வட்டத்தில் வருவாய் தீர்வாயம் 18.06.2024 அன்று தொடங்கியது. நிறைவுநாளான இன்று(20.06.2024) நத்தம் குறு வட்டத்திற்கு உட்பட்ட சமுத்திராபட்டி, ஊராளிபட்டி, பூதகுடி, பண்ணுவார்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுமண்டலம், வேலம்பட்டி, நத்தம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

இன்றையதினம் மனு அளித்தவர்களில் 5 மனுதாரர்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்கப்பட்டது. இதுதவிர ஏற்கனவே மனு அளித்த மனுதாரர்களின் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்படி 54 நபர்களுக்கு பட்டா, 5 நபர்களுக்கு பட்டா உட்பிரிவு ஆணை, 23 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

பொதுமக்கள் பல்வேறு நிலைகளில் தீர்வு காணப்படாத கோரிக்கைகளுக்கு இங்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனு அளிக்கின்றனர். பொதுமக்களின் ஒவ்வொரு மனுக்களும் அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனை ஆகும். எனவே பொதுமக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனு மீதும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கவனமுடன் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். எளிதில் தீர்வு காணக்கூடிய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கண்டு, அரசு அலுவலகங்களை நாடிவரும் மனுதாரர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திட வேண்டும். மனுக்கள் மீது தொடர் விசாரணை மேற்கொள்ள வேண்டியது இருப்பின் அதுகுறித்து, விசாரணை மேற்கொண்டு, எந்தவித காலதாமதமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு, மனுக்களுக்கு தீர்வு காண அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும், என வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(நிலஅளவை) திரு.சிவக்குமார், வட்டாட்சியர்கள் திருமதி சுகந்தி, திரு.சரவணன் மற்றும் தொடர்புடைய பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.