Close

liquor illegal sale – Meeting

Publish Date : 02/07/2024
.

செ.வெ.எண்:-53/2024

நாள்:-24.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டத்தினை ஒழிப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்தறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் நடமாட்டத்தினை ஒழிப்பது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்தறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.06.2024) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாவது:-

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் விழிப்புடன் இருந்து தங்கள் கிராமத்தில் நடைபெறும் விழா காலங்கள், பிறப்பு, இறப்பு நிகழ்வுகள் போன்றவற்றில் போதை பொருள் நடமாட்டத்தினை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் குறித்து புகார் வரும் பட்சத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு தெரிவித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தடை செய்யப்பட்ட போதை பொருள் ஒழிப்பிற்காக குழு ஏற்படுத்தி 15 தினங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி தகவல் தெரிவிக்க வேண்டும்.

போதை பொருள் மற்றும் மன மயக்க பொருள் தயாரித்தல் குறித்து நுண்ணறிவு தகவல்களை சேகரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து வேதியியல் பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை கண்காணித்திட வேண்டும்.

கோட்ட கலால் அலுவலர்கள் தங்கள் கோட்டத்தில் உள்ள டி.எல்.2, எப்.எல்.1, /2,/3,/3A/4A மற்றும் இதர உரிமத்தலங்களை திடீர் தணிக்கை மேற்கொண்டு விற்பனை குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்து விதி மீறல்கள் இருந்தால் உரிமங்களை ரத்து செய்திட வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள போதை ஒழிப்பு குழுவினர்கள் தங்களது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பெட்டிக்கடைகள், மருந்துகடைகளில் போதை பொருட்கள் விற்பனை குறித்து கண்காணித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திட வேண்டும். தகவல் வழங்கும் நபர்கள் குறித்த விபரம் ரகசியம் காக்கப்படும்.

மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சவாடிகளில் தணிக்கையினை தீவிப்படுத்தி தடை செய்யப்பட்ட மதுபானங்கள் கடத்தி செல்வதனை முற்றிலும் கட்டுப்படுத்திட வேண்டும். காவல்துறையினர் கட்டணமில்லா தொலைபேசி எண்-10581 மதுவிலக்குப் பிரிவிற்கு 78453 85637, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 94981 81204, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி பிரிவு எண்- 94981 01520 ஆகிய எண்களுக்கு வரும் தகவல்களின் ரகசியம் காத்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப்,இ.கா.ப அவர்கள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ், உதவி ஆணையர்(கலால்) திரு.பால்பாண்டி, மாவட்ட மேலாளர்(டாஸ்மாக்) திரு.சரவணன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.