Close

Agri enterpurner & Nammalwar Award

Publish Date : 13/07/2024

செ.வெ.எண்:-17/2024

நாள்:-06.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் “நம்மாழ்வார் விருது” பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான “நம்மாழ்வார் விருது” 2023-24-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

2024-25ஆம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று 2024-25ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி உயிர்ம வேளாண்மையை சிறப்பான முறையில் ஒவ்வொரு வேளாண் குடும்பங்களுக்கும் எடுத்துச் செல்லும் தன்னார்வ விவசாயிகளின் அயராத முயற்சிகள் இந்த மண்ணையும், சுற்றுச்சூழலையும் காக்கும் அங்கக விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், மேலும் உற்சாகத்துடன் செயல்படுவதற்கும், 3 உயிர்ம வேளாண்மை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். முழுநேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டு அதற்குரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in/என்ற அக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவு செய்ய 30.09.2024-ம் தேதிக்குள் பதிவுக்கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்டம் மற்றும் மாநில மதிப்பீட்டுக் குழுக்கள் ஆய்வு செய்து வெற்றியாளரை தீர்மானிக்கும். வெற்றிபெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். முதல் பரிசு ரூ.2.50 இலட்சம் மற்றும் ரூ.10,000 மதிப்புடைய பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.1.50 இலட்சம் மற்றும் ரூ.7,000 மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1.00 இலட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள், நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.