Close

NSNOP-schools development

Publish Date : 13/07/2024
.

செ.வெ.எண்:-19/2024

நாள்:-08.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டம் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(08.07.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலில் கல்வியினை வழங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்காக “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.

அனைத்து அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பெரு, சிறு மற்றும் குறு நிறுவனங்களின் வாயிலாகப் பெறப்படும் நிதி, பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு https://nammaschool.tnschools.gov.in என்ற இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதளத்தில் அரசுப்பள்ளித் தேவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட பள்ளியின் தேவைகளை நன்கொடையாளர்கள் அறிந்து நன்கொடை அளிக்கலாம். நன்கொடை அளித்த பிறகு பணிகளின் நிலைவாரியான அறிக்கை மற்றும் பயனீட்டுச் சான்றிதழ் சம்பந்தப்பட்ட நன்கொடையாளருக்கு மாநில இயக்ககத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 27 பள்ளிகளின் தேவைகளில் 39 பணிகளுக்குரிய தொகையானது பள்ளிகளின் NSNOP வங்கிக்கணக்கில் பெறப்பட்டு, 34 பணிகள் நிறைவடைந்து விட்டன. 5 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தமுள்ள 39 பணிகளில், நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.21,72,466 மதிப்பிலான 33 பணிகள் சார்ந்த பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாகவும், ரூ.19,07,625 மதிப்பிலான 6 பணிகள் நன்கொடையாளர்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் தற்போது, நடப்பாண்டில் 4 பள்ளிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுண்ணன. அதன்படி, வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், செக்காபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் கழிப்பறை மற்றும் சீரமைத்தல் பணிக்காக ரூ.10.00 இலட்சம் தொகை “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ (NSNOP) மாவட்ட வங்கிக் கணக்கில் பெறப்பட்டுள்ளது. திண்டுக்கல் புறநகர் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்கு வகுப்பறை கட்டும் பணிக்காக ரூ.66.00 இலட்சம் தொகை “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ (NSNOP) மாவட்ட வங்கிக்கணக்கில் பெறப்பட்டுள்ளது. வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிவறை கட்டும் பணிக்காக ரூ.10.00 இலட்சம் தொகை “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ (NSNOP) மாவட்ட வங்கிக்கணக்கில் பெறப்பட்டுள்ளது. தொட்டனம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நான்கு வகுப்பறை கட்டும் பணிக்காக ரூ.70.30 இலட்சம் தொகை “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ (NSNOP) மாவட்ட வங்கிக் கணக்கில் பெறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.1,56,30,000 (ஒரு கோடியே ஐம்பத்து ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய்) பெறப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் ரூ.1,56,30,000 (ஒரு கோடியே ஐம்பத்து ஆறு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய்) மதிப்பில் இரண்டு பள்ளிகளில் கழிவறை கட்டும் பணிகள் மற்றும் இரண்டு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டும் பணிகளை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகத் துறையினருக்கு உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் குறித்த நேரத்தில் பணியினை முடிக்க ஆலோசனைகளை வழங்கி, பணிகள் சார்ந்த மதிப்பீடுகள் பெறப்பட்ட பின் பணி ஆணை மற்றும் தொகை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசுடன், தனியார் ஒத்துழைப்பும் கிடைக்கும்போது. மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் மேம்படுவதோடு, வாழ்க்கைத்தரம் மற்றும் சமுதாயம் மேம்பாடு அடையும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன், “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ உதவி திட்ட அலுவலர் திரு.செல்வராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுதாகர், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலைக்கல்வி) திரு.சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.