Close

Tamil Semmal Award

Publish Date : 23/07/2024
.

செ.வெ.எண்:-57/2024

நாள்:-22.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்ச் செம்மல் விருதாளர் திரு.து.இராஜகோபால் அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பொன்னாடை அணிவித்து, நூல் பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் “தமிழ்ச் செம்மல் விருது” தமிழ் வளர்ச்சித் துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருதுக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்” விருதும், விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக ரூ.25,000 மற்றும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது திரு.து.இராஜகோபால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

திரு.து.இராஜகோபால் அவர்கள், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 22.10.1940 அன்று பிறந்தவர். திண்டுக்கல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றுள்ளார். தமிழறிஞர்கள் மயிலை சீனி.வேங்கடசாமி, கம்பன் அடிப்பொடி சா.கணேசன், புலவர் இரா.இளங்குமரனார், தமிழன்னல் புதுச்சேரி இரா. திருமுருகன், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவர் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (வினா- விடை) எளிய முறையில் இனிய தமிழ் (இலக்கண நூல்), பாரதியின் புதிய ஆத்திச்சூடி, செந்தமிழும் நாப்பழக்கம் (ஒலிப்பு நூல்), திண்டுக்கல் ஊரும் – பெயரும் (ஆய்வு நூல்), கார் நாற்பது (மூலமும் உரையும்), களவழி நாற்பது (மூலமும் – உரையும்) உட்பட 30-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தற்போது 84 அகவை ஆகும் திரு.து.இராசகோபல் அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள ஆண்டாள் நகர் (எம்.எஸ்.பி மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் பின்புறம்) கனிமொழி இல்லத்தில் வசித்து வருவதுடன் தொடர்ந்து தமிழ் நூல்களை எழுதி தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(22.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்ச் செம்மல் விருதாளர் திரு.து.இராஜகோபால் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நூல் பரிசு வழங்கியும் சிறப்பு செய்து, பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி மு.முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கங்காதேவி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு.பெ.இளங்கோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.