Close

Animal Husbandry – Lumpy Skin Disease

Publish Date : 08/08/2024

செ.வெ.எண்:-13/2024

நாள்:-06.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

தோல் கழலை நோய் பரவலை தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தோல் கழலை நோய்/ லம்பி தோல் நோய் என்பது கால்நடைகளுக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும். தோல் கழலை நோய் என்பது பாக்ஸ் விரிடேயின் குடும்பத்தைச் சேர்ந்த கேப்ரிபாக்ஸ் வைரஸினால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் (பசு மற்றும் எருமை) இருந்து கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் புறஒட்டுண்ணிகள் மூலம் மற்ற ஆரோக்கியமான கால்நடைகளுக்கு பரவுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு கடுமையான காய்ச்சல் இருக்கும். கண்ணில் நீர் வடிதல் மற்றும் மூக்கில் சளி ஒழுகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறிகள். உடல் முழுவதும் கண்டு கண்டாக வீக்கம் காணப்படும். உருண்டையாக உள்ள கட்டிகள் உடைந்து சீல் வெளியேறும். இந்த கட்டியின் அகலம் 0.5 முதல் 5.0 செ.மீட்டர் வரை இருக்கும். நிணநீர் சுரப்பிகள் பெரியதாக காணப்படும். கால்கள் வீங்கி இருக்கும். மாடுகள் சோர்வாக காணப்படும்.

கொசு, ஈ, உண்ணி கடி மற்றும் பாதிக்கப்பட்ட மாடு மூலமாகவும், பால் கறவையாளர்கள் மூலமாகவும், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாடு வாங்கி வந்தால் அதன் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது. இந்த நோய் வைரஸ் கிருமியானது மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாட்கள் வரை வாழும். கன்று குட்டிகள், பாதிக்கப்பட்ட மாட்டின் பாலை அருந்தும்போதும் நோய் தொற்று ஏற்படுகிறது. கோடைகாலத்தில் இந்நோய் அதிக அளவில் பரவுகிறது.

இந்நோய் தொற்று 60 சதவீதம் வரை மாடுகளை பாதிக்கிறது. இதனால் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பதில் பாதிப்புகள் ஏற்படும். தீவனம் சரியாக உட்கொள்ளாமல் உடல் எடை குறைந்து காணப்படும். காயங்களால் மாட்டின் தோல் முற்றிலும் பாதிப்படையும். இளம் சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சினை மாடுகளில் மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் நோய் தொற்று ஏற்பட்டாலும் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது.

பாதிக்கப்பட்ட கால்நடைகளை ஆரோக்கியமான கால்நடைகளிடம் இருந்து தனிமைப்படுத்திட வேண்டும். மேய்ச்சலுக்கு அனுப்புவதை தடுத்திட வேண்டும். கொசுக்கள், ஈக்கள், உண்ணிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம். பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரம் தனியாக இருக்க வேண்டும். கறவையாளர்கள் பாதிக்கப்பட்ட மாடுகளை தொட நேர்ந்தால் உடனடியாக கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்த பிறகே மற்ற மாடுகளை தொட வேண்டும். சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு மேல் வயதுடைய அனைத்து பசுவினங்களுக்கும் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர்களும், தங்களது 4 மாதங்களுக்கு மேல் வயதுடைய பசுவினங்களுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை செலுத்தி, தங்கள் கால்நடைகளை இந்நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.